கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.கவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றஞ்சாட்டி X பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் பா.ஜ.க தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கச்சத்தீவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல் வெளியிடப்பட்டது. இந்த தகவலை பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பகிர்ந்து நேற்று காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் செய்தார். இந்நிலையில் இன்று தி.மு.கவை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான ஆங்கில செய்தியைப் பகிர்ந்து அவர் கூறுகையில், "கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.கவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கச்சத்தீவு குறித்தான புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது.
தி.மு.கவும், காங்கிரசும் தங்கள் குடும்ப நலனை பற்றி மட்டுமே எண்ணுகின்றன. கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், தி.மு.க காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாக்க தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டி பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“