பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக தமிழக காவல்துறை உருவாக்கிய ‘காவலன் ஆப்’ அவசர பாதுகாப்பு மொபைல் பயன்பாட்டு சேவையைப் பயன்படுத்தி போலீசார் சென்னை கொருக்குப்பேட்டையில் முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தெலங்கானாவில் 27 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், முதிவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் தமிழக காவல்துறையால் ‘காவலன் ஆப்’ உருவாக்கப்பட்டது.
இந்த ‘காவலன் ஆப்’ஐ பெண்கள், முதியவர்கள் என தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக இந்த ‘காவலன் ஆப்’பில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் விரைவாக வந்து குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். அதனால், ‘காவலன் ஆப்’ஐ பெண்களிடையே பரவலாக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நிலையில், ‘காவலன் ஆப்’ செயல்பாட்டுக்கு வந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில், வீட்டில் ஒரு பெண் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் 2 பேர் நுழைந்தனர். இதனால், அச்சமடைந்த அந்தப் பெண் தனது செல்போனில் இருந்த ‘காவலன் ஆப்’பில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவசரப் பாதுகாப்பு கோரி தகவல் அளித்தார். இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறை இரண்டு பேரையும் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அடையாளம் தெரியாமல் வந்ததாக தெரிவித்தனர்.
‘காவலன் ஆப்’ முதல் கைது நடந்தது என்ன?
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் 47 வயதான பெண் மற்றும் அவரது மாமியார் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத 2 நபர்கள் வீட்டுக்கு வந்தபோது அந்தப் பெண் உடனடியாக ‘காவலன் ஆப்’பில் அபாயமணி பட்டனை அழுத்தினார்.
இதையடுத்து கொருக்குப்பேட்டையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆர்.கே.நகர். போலீசார், வீட்டில் இருந்த 2 பேரைப் பிடித்தனர். போலீசார் அவர்களைப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் பெயர் தாவுத், சலீம் என்பது தெரியவந்தது.
முதலில் அந்தப் பெண் அவர்களை, கூரியர் தபால்களை அளிப்பவர்கள் என்று நினைத்து வழிகாட்டியதாக தெரிவித்தார்.
ஆனால், பிடிபட்ட நபர்கள், அந்த வீட்டை மசாஜ் பார்லர் என்று நினைத்து சென்றதாக தெரிவித்தனர். இருப்பினும், போலீசார் அவர்கள் மீது அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதன் மூலம் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘காவலன் ஆப்’ வழியாக வந்த முதல் புகாரில் காவல்துறையினர் இரண்டு பேரை முதலில் கைது செய்துள்ளனர்.