மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் திறப்பு விநாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/868ce6f3-9f3.jpg)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு, கடந்த 16-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.76 அடியை எட்டியபோது, டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/7af5aa85-1cc.jpg)
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43-வது முறையாக, நீர்மட்டம் 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக, விநாடிக்கு 60,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/2d4c9fd4-723.jpg)
தொடர்ந்து, இன்று (ஜூலை 31) காலை முதல் விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக 1,03,500 கனஅடியும், அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கனஅடியும் மற்றும் கால்வாய் வழியாக 500 கனஅடியும் என மொத்தமாக 1,25,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 68,168 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து திடீரென 1,25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/3d917b57-d92.jpg)
இதனிடையே, மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரானது முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 1,75,000 கன அடி வரை அதிகரிக்கலாம். எனவே, காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/bfead869-c66.jpg)
இதற்கிடையில், முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், கீதாபுரம் பகுதிகளில் திருச்சி தெற்கு காவல் துணை ஆணையர் விவேகானந்தா சுக்லா, உதவி ஆணையர் நிவேதாலட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் குளிக்கவும், வேடிக்கை பார்க்கவும் நீரில் இறங்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“