தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (04.03.2025) காலமானார்.
கவிஞரும் பட்டமன்றப் பேச்சாளருமான நந்தலாலா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (04.03.2025) உயிரிழந்தார். கவிஞர் நந்தலாலா, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக் குழு தெரிவித்துள்ளது.
த.மு.எ.க.ச-வின் மாநில துணைத் தலைவரும் கவிஞருமான நந்தலாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதி நிகழ்வுகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று த.மு.எ.க.ச மாநிலக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன். தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது.
பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை, அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்”என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் நந்தலாலா மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள வி.சி.க எம்.பி ரவிக்குமார், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருச்சி என்றாலே நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று தோழர் நந்தலாலா. எனக்கு மட்டுமல்ல, இலக்கியத் தொடர்புகொண்ட அனைவருக்குமே அப்படித்தான்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தாரென்றாலும் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதியாகவே எல்லோராலும் அவர் உரிமையோடு கருதப்பட்டார்.
மணற்கேணி சார்பில் திருச்சியில் நடந்த அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்றுச் சிறப்பித்தவர். வங்கிப் பணியில்தான் ஓய்வுபெற்றார், பொதுப்பணிகளில் ஓயாமல் உழைத்தார். அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் விலக்க முடியாத துயரம் அப்பிக்கொண்டுவிட்டது.
கூட்டங்களில் சந்தித்த எனக்கே இது பெரிய இழப்பாகத் தெரியும்போது, அவரது குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் அவரது மறைவு ஏற்கவே முடியாத பேரிழப்பாகவே இருக்கும்.
தோழர் நந்தலாலாவுக்கு என் அஞ்சலியையும் அவரை இழந்து தவிப்போருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கவிஞர் நந்தலாலாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.