வைரமுத்துவுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை பாய்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 16-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்டு பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.
இந்து மதத்தை அவமதிப்பது போல் இனி யார் பேசினாலும் அவர் கொலை செய்யப்பட வேண்டும்- நயினார் நாகேந்திரன் https://t.co/qXDryTtWaV #NainarNagendran #Andal #andalcontroversy #Vairamuthu
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 18, 2018
நயினார் நாகேந்திரன் பேச்சின் ஒரு பகுதி வருமாறு : ‘ஒரு புல்லுருவி சூடிக் கொடுத்த சுடர் கொடியாளை, தமிழை ஆண்டாளை பழித்துப் பேசினாரோ, அன்றிலிருந்து தூக்கம் வரவில்லை. அவரை நாம் என்ன செய்ய முடியும்? நாம் ஏதாவது செய்தால் கைது செய்துவிடுவார்கள். ஆனால் பேசியவரை எதுவும் செய்யவில்லை.
கருணாநிதி எத்தனை முறை ராமரை பழித்துப் பேசினார்? அதற்கு பிறகும் அவர் ஆட்சிக்கு வந்தார். அதுதான் வேதனை? எத்தனை பேருக்கு உணர்வு இருக்கிறது? அதுக்கெல்லாம் முடிவு கட்டுகிற வகையில்தான் இன்று ஜீயர்களே போராட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
பாதிரியார்கள் இன்னாருக்கு ஓட்டுப் போடு என கூட்டம் போட்டு சொல்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் யாரும் அப்படி சொல்வதில்லை. இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஜீயர்கள் நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள். அதன் மூலமாக வைரமுத்து, வீரமணி போன்றவர்களை நாட்டை விட்டு துரத்த முடியும்.
வைரமுத்து, வீரமணி போன்றவர்கள் இது போன்ற வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக இன்று முதல் கோவில்களில் யாகம் நடத்தக் கூறுங்கள். அவர் பேசிவிட்டார். நான் இன்று சொல்கிறேன். வைரமுத்து நாக்கை அறுத்து வாருங்கள். நயினார் நாகேந்திரன் 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் காவல்துறை என் மீது எஃப்.ஐ.ஆர். போடுவார்களா, மாட்டார்களா? ஆனால் இப்போது தெய்வத்தை பழித்துப் பேசியிருக்கிறார். இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் அதிகமா பேசுறாங்க. நம்ம சகோதரி ஒருவர் சொன்னார்… மைலாப்பூரில் யாரும் மடிசார் கட்டி வர முடியாது, தூக்கிட்டுப் போயிடுவோம்னு சொன்னாங்களாம். அப்படி ஒரு பிரச்னை என்றால், கோடானு கோடி நயினார் நாகேந்திரன்கள் உருவெடுத்து வருவார்கள். நான் இதையெல்லாம் பேசுகிறேன், பெரியவர்கள் இங்கு பேசாமல் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதில் இருப்பது எங்களுக்கு தெரிகிறது.
தமிழகத்தில் இனி ஒரு ஆட்சி வருகிறது என்றால், நரேந்திர மோடி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும். அதற்காக என்னைப் பொறுத்தமட்டில், நாம் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த தொந்தரவையும் செய்யப் போவதில்லை. நாம் எல்லோருக்கும் பாதுகாப்பாகத்தான் இருக்க வேண்டும்.
அதேசமயம் இந்து தர்மத்தை, நமது தெய்வத்தை யாராவது ஒருவர் வாய் மீது பல் போட்டுப் பேசினால் அவரை கொலை செய்வதற்கு கூட தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு ஏளனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சாதாரணமாக பேசிவிட்டுப் போகிறார்கள்? வைரமுத்துவை கொலை செய்யலாமா, கூடாதா? (கூட்டத்தில் இருந்து சிலர், ‘செய்யலாம்’ என கோஷமிட்டனர்)
இப்போது ஆண்டாள், வைரமுத்து ரூபத்தில் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினரையும் எழுந்து நிற்க வைத்திருக்கிறார். திமுக இனி தமிழகத்தில் எடுபடாது. இந்துக்கள் சாதியாக பிரிந்து கிடக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள். தேர்தல் வரும்போது நம் பலத்தை காட்ட வேண்டும்’ என பேசினார் நயினார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக.வில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு பாஜக.வில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு, மாநில துணைத் தலைவர் பதவி கொடுத்தனர். அதன்பிறகு கட்சியில் மாநில அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காத நயினார், இந்த சர்ச்சை பேச்சின் மூலமாக ‘லைம்லைட்’டுக்கு வந்திக்கிறார்.
இதுநாள் வரை பாஜக.வில் ஹெச்.ராஜாவின் பேச்சு மட்டுமே சர்ச்சை மயமாக இருந்தது. திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவரான நயினாரின் இந்தப் பேச்சு அதையும் விஞ்சுகிற ரகம்! வைரமுத்துவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விட்டிருப்பதாக இந்தப் பேச்சு, பல்வேறு தளங்களில் கண்டனத்தையும் பெற்று வருகிறது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.