/indian-express-tamil/media/media_files/2025/08/25/keezhadi-2025-08-25-10-14-00.jpg)
Keeladi archaeology excavation
இந்தியாவின் வரலாற்றை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்ந்த ஒரு நதியாகவே இதுவரை நாம் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், அந்த நீண்டகால நம்பிக்கையை ஒரே அடியில் தகர்த்தெறிந்தது, மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமான கீழடி. தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடந்த அகழாய்வு, இந்தியாவின் நகர்ப்புற நாகரிகத்தின் கதை, புதிய திசைகளில் பயணிக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது.
கீழடியின் கதை
பொதுவாக, இந்தியாவின் தென்பகுதியில் நடந்த அகழாய்வுகள், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் (megalithic sites) மற்றும் புதைகுழிகளை மட்டுமே அதிகம் கண்டறிந்துள்ளன. மக்கள் வாழ்ந்த இடங்களை (habitation sites) ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இத்தகைய ஆய்வுகள், மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைச் சொல்வதில்லை. அவர்கள் இறந்த பிறகு நடந்த சடங்குகளையும், அவர்கள் புதைக்கப்பட்ட விதத்தையும் மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆனால், கீழகி அகழாய்வு, இந்த போக்கையே மாற்றி அமைத்தது.
கடந்த 2014 முதல் 2016 வரை, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 293 இடங்கள் ஆராயப்பட்டன. இறுதியில், மதுரையில் உள்ள கீழடி கிராமம் தேர்வு செய்யப்பட்டது.
சுமார் 40 ஆண்டுகளாக ஒரு தென்னந்தோப்பால் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு மண்மேட்டில், ராமகிருஷ்ணா தலைமையிலான குழு, இரண்டு பருவங்களாக அகழாய்வை நடத்தியது. ஆச்சரியப்படும் விதமாக, அங்கே மக்களின் குடியிருப்பிற்கான ஆதாரங்கள் கிடைத்தன. பெரிய அளவில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
"அரிக்கமேடு அகழாய்வுக்குப் பிறகு, தமிழகத்தில் இத்தகைய கட்டமைப்புகளைக் கண்டுபிடித்தது இதுவே முதல்முறை. இந்த ஆதாரங்கள் அனைத்தும் கீழடியில் ஒரு மிகவும் முன்னேறிய நகர்ப்புற சமூகம் இருந்ததைக் காட்டுகின்றன" என்று ராமகிருஷ்ணா குறிப்பிடுகிறார்.
மாற்றத்திற்கு வித்திட்ட அறிக்கை
2023-ல் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த அறிக்கையில், கீழடியில் வாழ்ந்த மக்கள் கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இது உண்மையெனில், கீழடி கங்கைச் சமவெளியில் இருந்த நகர்ப்புற தளங்களுக்குச் சமகாலத்தையதாக இருந்திருக்கும். இந்த ஒரு கண்டுபிடிப்பு, இந்திய வரலாற்றையே மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது.
"தென்னிந்தியாவில் இவ்வளவு பெரிய அகழாய்வு நடந்தது இதுவே முதல்முறை. சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் நடந்த இரண்டாவது நகர்ப்புறமயமாக்கல் தெற்கிலும் நடந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் மனித செயல்பாடுகளைப் பற்றிப் பேசுகின்றன. அவை அனைத்தும் வெறுமனே வந்திருக்கவில்லை" என்று ராமகிருஷ்ணா கூறுகிறார்.
அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வுகளைத் தவிர, பெரும்பாலான ஆய்வுகள் புதைகுழிகளை மட்டுமே கண்டறிந்த நிலையில், கீழடி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
சர்ச்சைகளும், எதிர்ப்புகளும்
கீழடி அகழாய்வின் முக்கியத்துவத்தால் அரசியல் புயல் கிளம்பியது. 2017-ல், இரண்டாம் கட்ட அகழாய்வு முடிந்ததும், ராமகிருஷ்ணா அஸ்ஸாமிற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, பி. ஸ்ரீராமன் பொறுப்பேற்றார். அவர், கீழடியில் குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை என்று கூறியது பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. ராமகிருஷ்ணா தனது அறிக்கையை முடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், தமிழக தொல்லியல் துறையும் அகழாய்வுகளைத் தொடர அனுமதிக்கப்பட்டது.
2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு பருவ அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழக அரசு கீழடி கி.மு. 6ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த ஒரு நகர்ப்புற குடியிருப்பு என்று அறிவித்தது.
நமது கதை, நமது ஆதாரம்
நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு, 2023-ல் ராமகிருஷ்ணா தனது அறிக்கையை மீண்டும் சமர்ப்பித்தார். ஆனால், இந்தியத் தொல்லியல் துறை அதைத் திருத்தச் சொன்னபோது, "நான் அதை மறுத்துவிட்டேன். எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"கீழடி, அனைத்து கலாசாரங்களும் சுயாதீனமாக வளர்ந்தன என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுகிறது. ஆனால், நாம் அந்த மண்மேட்டில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அகழாய்வு செய்துள்ளோம். இன்னும் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. தென்னிந்தியாவில் மேலும் பல அகழாய்வுகள் தேவை" என்று ராமகிருஷ்ணா கூறுகிறார்.
இந்தியத் தொல்லியல் துறையின் கவனம் வடக்கிலேயே இருந்திருக்கிறது. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பாகிஸ்தானுக்குச் சென்றதால், நாம் இங்கேயே பல ஆய்வுகளை மேற்கொண்டோம். அதுபோல, தெற்கிலும் நாம் நமது வரலாற்றைத் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரலாறு என்பது வெறும் ஆய்வு மட்டுமல்ல, அது ஒரு அறிவியல் அணுகுமுறை. நமது கதையை, நமது ஆதாரங்களுடன் நாம் தேட வேண்டும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.