நாற்பத்தைந்து வயதான ராஜண்ணா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மதுரையில் கழித்துள்ளார். அவரது வீடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கீழடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழடியில் சங்க கால தொல்பொருள் தளம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த கிராமம் தனது வீட்டிற்கு மிக அருகில் இருப்பதை 2013 ஆம் ஆண்டு வரை ராஜண்ணா அறிந்திருக்கவில்லை. "இது ஒரு சிறிய, வெளியில் தெரியாத நகரம், அதை யாரும் பொருட்படுத்தியதில்லை," என்று ராஜண்ணா கூறினார்.
இதையும் படியுங்கள்: சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது: சென்னை மாநகராட்சி ஏற்பாடு
தொழில் ரீதியாக பல் மருத்துவரான ராஜண்ணா, மதுரையில் புறக்கணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யும் கிரீன்வாக் என்ற இலாப நோக்கற்ற அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு கீழடிக்கு முதல் நடைபயணத்தை ஏற்பாடு செய்தபோது சுமார் 650 பேர் வந்திருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். "இந்த வகையான வரவேற்பு மிகப்பெரியது மற்றும் முன்னோடியில்லாதது," என்று ராஜண்ணா கூறினார். பிற இடங்களுக்கான அவரது பெரும்பாலான நடைபயணங்களுக்கு வருகை தந்தோர் எண்ணிக்கை சுமார் 150 முதல் 200 பேர் என்று ராஜண்ணா சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிறகு, இப்பகுதியை பார்வையிட பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
காரைக்குடி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் இரண்டு வருடங்களில் 18 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழடியில் இருந்து கிடைத்த கண்டுபிடிப்புகள், விவசாய முறைகள், மண்பாண்டங்கள், தொழில்நுட்பம், அடக்கம் செய்யும் முறைகள், எழுத்துச் சான்றுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழர் வாழ்வின் கதையை உருவாக்கி ஆறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை வரவேற்கும் முதல் மண்டபம், பழங்கற்காலத்திலிருந்து கீழடியில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் வரை தமிழகத்தின் கதையை விவரிக்கும் 15 நிமிட ஆவணப்படம் திரையிடப்படும் இடம். "உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பெருமைப்படுத்திய தொல்லியல் அகழ்வாராய்ச்சி கீழடி" என்று திரையிடல் கூறுகிறது.
நகர்ப்புற நாகரீகமாக கருதப்பட வேண்டிய அனைத்து அம்சங்களையும் கீழடி திருப்திப்படுத்துகிறது" என்று அருங்காட்சியகத்தின் பராமரிப்பையும் கவனித்து வரும் தொல்பொருள் அதிகாரி காவியா (25) கூறினார். "கீழடி அழகாய்வு வணிகம், நெசவுத் தொழில், நாகரிகம், அடக்கம் செய்யும் நடைமுறைகள் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றின் ஆதாரங்களைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த அகழாய்வு தளமும் இந்த புள்ளிகளை திருப்திப்படுத்தவில்லை,” என்று காவியா கூறினார்.
இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சுமார் 1,500 பார்வையாளர்களையும் வார இறுதி நாட்களில் சுமார் 4,000 பார்வையாளர்களையும் ஈர்க்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், கீழடி பாடத்திட்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தங்களின் பழமையைப் பற்றி அறிய ஆர்வமுள்ள பொது மக்கள் ஆகியோர் அடங்குவர். "ஒரு சந்தர்ப்பத்தில், கண்டுபிடிப்புகளைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருவரை நான் கண்டேன், அவர் தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில், அகழ்வாராய்ச்சிக்கு தனது நிலத்தை வழங்க ஒப்புக்கொண்ட நில உரிமையாளர்களில் ஒருவரின் காலில் விழுந்தார்," என்று கீழடி அகழாய்வுக்கு பொறுப்பான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அஜய் குமார் நினைவு கூர்ந்தார்.
அருங்காட்சியகத்திற்கு வெளியே பரந்து விரிந்த தென்னந்தோப்புகள் உள்ளன, அதே சமயம் ஒரு குறுகிய மண் சாலை ஒரு கிலோமீட்டர் தொலைவில் 'கீழடி தொல்பொருள் தளம்' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகைக்கு செல்கிறது. அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பெரும்பாலான மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்கிறார்கள். அங்கு நடந்து செல்லும்போது, 110 ஏக்கர் பரப்பளவில் பல பெரிய அகழிகள் தோண்டப்பட்டு நாற்கரங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த அகழிகளில் இருந்துதான் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் (ASI) பின்னர் மாநில தொல்லியல் துறையும் பெரிய செங்கல் கட்டமைப்புகளைக் கண்டுபிடித்தன, அவை ஜவுளித் தொழில் செழித்து வளர்ந்ததற்கான சான்றாகும். அதுமட்டுமின்றி, இரும்புக் கருவிகள், பீங்கான் மண்பாண்டங்கள், முத்திரைகள், மனித எலும்புகளைச் சுமந்து செல்லும் கலசங்கள், இன்னும் நிறைய தோண்டி எடுக்கப்பட்டு, ஆய்வு செய்த போது தமிழர் நாகரிகம் கி.மு 600 வரை பின்னோக்கி செல்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. தமிழ்-பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள், தமிழ்நாட்டில் எழுத்தறிவு இதுவரை அறியப்பட்டதற்கு முன்பே தோன்றியிருப்பதைக் காட்டுகின்றன.
முதல் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு இந்த சிறிய மற்றும் ஒரு காலத்தில் பெரிதும் அறியப்படாத கிராமத்தின் அன்றாட வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்த கண்டுபிடிப்புகள், 2020 முதல் கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் போன்ற அருகிலுள்ள கிராமங்களிலும் இதேபோன்ற அகழ்வாராய்ச்சியைத் தூண்டியுள்ளன.
சிறந்த சாலைகள், பொதுப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் கிராம மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, "இந்தத் திட்டம் இந்த கிராமத்தில் நல்ல வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது" என்று காவியா கூறினார்.
”அகழாய்வு தளத்தில், அகழ்வாராய்ச்சி மற்றும் வரிசைப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபடுவோரில் கிட்டத்தட்ட அனைவரும் உள்ளூர்வாசிகள். அவர்களில் பலர் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியே செல்லாத பெண்கள்," என்று காவியா கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக கீழடி தளத்தில் பணிபுரிந்து வரும் 45 வயதான பசும்பொன், தற்போது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறிய மணிகளை முதன்முதலில் கண்டுபிடித்தது நான் தான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார். அவரது கணவருக்கு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்ய முடியாமல் போனதால், பசும்பொன் தனது நான்கு பேர் கொண்ட குடும்பத்தை தனியாளாக நடத்தி வருகிறார். தொல்லியல் தளத்தில் வேலை செய்வது, பிளாஸ்டிக் நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்த தனது முந்தைய வேலையை விட மிகச் சிறந்தது, இங்கு சம்பாதிப்பதில் பாதிக்கும் குறைவாகவே பிளாஸ்டிக் நிறுவனத்தில் சம்பாதித்தாக பசும்பொன் கூறினார்.
இங்கு செய்யப்படும் பணியின் முக்கியத்துவம் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்று கேட்டதற்கு, "அந்த சிறிய மணிகளை நாங்கள் கண்டுபிடித்ததால்தான் கீழடி பிரபலமானது," என்று பசும்பொன் கூறினார்.
வேலை கிடைத்ததற்கு நன்றியுள்ளவர்களாக இருந்தாலும், தங்கள் நிலத்தை அகழ்வாராய்ச்சிக்காக விட்டுக்கொடுப்பது தொடர்பாக மாநில அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நில உரிமையாளர்கள் மத்தியில் விரக்தி நிலவுவதையும் குடியிருப்பாளர்கள் அறிவார்கள். சில குடியிருப்பாளர்கள் indianexpress.com பேசுகையில், கிராம மக்கள் இன்னும் தங்கள் நிலத்தை அரசாங்கத்திற்கு விற்கவில்லை என்றும், அவர்கள் தங்கள் நிலத்தை அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதித்ததற்காக வாடகை வருமானம் பெறுகிறார்கள் என்றும் கூறினர்.
தற்போது ஒன்பதாவது கட்டத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியானது, கீழடியை தமிழர் வரலாற்றின் மையமாகவும் பெருமையாகவும் மாற்றியுள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் சி சாந்தலிங்கம், “தமிழகத்தில் உள்ள தொல்லியல் தளத்தை இவ்வளவு பேர் வருகைபுரிந்து பார்வையிடுவது வழக்கத்திற்கு மாறானது” என்று கூறினார்.
தொல்லியல் தளம் பெருமளவிலான பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் நிலையில், அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் எலுமிச்சைப் பழச்சாறு விற்கும் ஒரு சிறிய வண்டி உள்ளது, அதே நேரத்தில் அருங்காட்சியகத்தின் முன் ஒரு சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டுள்ளது, இது எதிர்காலத்தில் இப்பகுதியில் வணிகமயமாக்கல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது.
35 வயதுடைய நபர் ஒருவர், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதை உணர்ந்து, எலுமிச்சைப் பழச்சாறுக் கடையை அமைத்ததாகக் கூறுகிறார். வார இறுதி நாட்களில் சுமார் 1,000 பேர் இங்கு வந்தாலும், இன்று எனக்கு 50 வாடிக்கையாளர்கள் கூட இல்லை,” என்று அவர் கூறுகிறார், பெரும்பாலான நாட்களில் அவர் ரூ. 500 சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார். அவர் தளத்தில் விரைவில் அதிக கடைகள் வர உள்ளதைப் பற்றிய தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார், இது போட்டியாக இருக்கும் மற்றும் அவரது வருமானத்தை பாதிக்கும் என்று அவர் நம்புகிறார்.
53 வயதான இந்திரா, அருங்காட்சியகத்தை அடுத்த, 'கீழடி சங்கமம்' என்ற உணவு விடுதியில், ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார். அந்த வேலையைப் பற்றி வாய்வழியாகத் தெரிந்து கொண்டதாகச் சொல்கிறார். "கீழடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் இங்கு தற்போது அருங்காட்சியகம் இருப்பதைப் பற்றி மிகவும் பெருமையாக உணர்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார். சிற்றுண்டிச்சாலையில் கீழடி நினைவுப் பொருட்கள், சாவிக்கொத்துகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி காந்தங்கள் விற்பனை செய்யும் கவுன்ட்டர் உள்ளது.
அருங்காட்சியகம் தோன்றியதிலிருந்து கீழடியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திரா ஒப்புக்கொள்கிறார், அதேநேரம் அருகிலுள்ள கிராமங்களின் நிலை இன்னும் மாறவில்லை என்று ஏமாற்றத்துடன் கூறினார். அருங்காட்சியகம் முதன்முதலில் திறக்கப்பட்டபோது பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது என்று இந்திரா கூறினார். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், அன்றைய தினம் காலை முதல் ஒரு வாடிக்கையாளர் கூட வராத உணவகத்தின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து வந்தவர்களில் ஒருவரை இறக்கிவிட அங்கு வந்த ஆட்டோ டிரைவரான 22 வயது கலை, “ஆரம்பத்தில் மதுரையில் காந்தி மியூசியம் திறக்கப்பட்டபோது நிறைய பேர் அங்கு செல்வார்கள். இப்போது யாரும் அதைப் பார்ப்பதில்லை, ”என்று இந்திராவின் கருத்துக்களை இடைமறித்து கூறினார். “கீழடியும் கொஞ்ச நாள் கழிச்சு அப்படியே ஆகலாம்” என்றும் அவர் புன்னகையுடன் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.