/indian-express-tamil/media/media_files/2025/01/26/s1BK71EmPZvJOeOhAyiw.jpeg)
கோவை அருகே கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை திரும்ப பெறாவிட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு மாநகராட்சி எல்லை பகுதிகளை விரிவாக்கும் வகையில் கிராமப்புற பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மக்களின் கருத்து கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் கோவை மாவட்டத்தில் 1 நகராட்சி 4 பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் என மொத்தம் 14 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி உடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கோவை சரவணம்பட்டி அருகிலுள்ள எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் கீரணத்தம் ஊராட்சி பொதுமக்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தமிழக அரசு கிராம சபை கூட்டத்தின் தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீரணத்தம் ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சாம்பிராணி குட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் சிறப்பு தனி அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயல் அலுவலர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், அரசியலமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தமிழக அரசே கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய் என்னும் கருப்பு பட்டை பேட்ச் அணிந்து கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்ட வேலைவாய்ப்பு பறிபோகும், வீட்டு வரி, குடிநீர் கட்டணம் பல மடங்கு உயரும், குப்பைக்கு தனியாக வரி வசூலிக்கப்படும், காலியிடங்களுக்கு வரி விதிக்கப்படும், வீடு கட்ட வளர்ச்சி கட்டணம் பல மடங்கு உயரும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்காக மாநகராட்சியிடம் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் அப்பொழுதுதான் தீர்மானத்தில் கையெழுத்து இடுவோம் என்று கூறினார்கள்.
மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசு இந்த அரசாணையை கைவிடப்படவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆதார் அட்டை, குடும்ப அட்டை அனைத்தையும் ஆட்சியரிடம் சமர்ப்பித்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலை கீரணத்தம் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் அனைத்து கட்சி சார்பில் புறக்கணிப்போம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கிராம சபை கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்த அரசு அலுவலர்கள் அங்கு வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு உண்டான வசதிகளையோ குடிநீர் வசதிகளை சரிவர செய்து தரவில்லை ஏதோ ஒரு கண்துடைப்பு கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கில் கூட்டம் நடத்தியதாக கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.