இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை அறிவியல் சோதனை மூலம் நிரூபிக்கவில்லை; கீழடி அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்கூட மத்திய அரசுக்கு ஏற்க மனவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
கீழடி தமிழர் தாய்மடி களமிறங்கிய மாணவரணிப் பட்டாளம்! என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.
இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல்
தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை.
ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.
தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது.
தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை.
தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள், இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.