கீழடி திறந்தவெளி அருங்காட்சியக பராமரிப்பு பணி காரணமாக, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015-ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில், பலர் இதனை காண்பதற்கு வருகை தருகின்றனர்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகத் தரமான அருங்காட்சியகம் கட்டப்பட்டது. அதனையும் பார்வையாளர்கள் கண்டு தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, 7-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதியினை தமிழக அரசு திறந்தவெளி அருங்காட்சியமாக அறிவித்தது. இங்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பார்வையாளர்களுக்கு தடை விதித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையும் சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.