/indian-express-tamil/media/media_files/2025/06/18/WhatsApp Image Madurai-adfa6f3a.jpeg)
Madurai
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் கீழடி அகழாய்வு முடிவுகளை, மத்திய அரசு வெளியிடாமல் காலதாமதம் செய்து வருகிறது. இந்த அலட்சியமான போக்கைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் இன்று (ஜூன் 18, 2025) ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தலைமை தாங்கினார். அவருடன் மாணவரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம், கீழடி விவகாரத்தில் தமிழக இளைஞர்களின் மனநிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய திருச்சி சிவா எம்.பி., "தென்னிந்தியாவின் தொன்மையை, அதன் செழுமையான நாகரிகத்தை நிரூபிக்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு வேண்டுமென்றே வெளியிட மறுக்கிறது. இது வெறும் தரவுகளை மறைக்கும் செயல் அல்ல, தமிழரின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாற்றையும், கலாச்சார அடையாளத்தையும் அழிக்க நினைக்கும் அப்பட்டமான சதி. தமிழக மக்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கீழடி தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசு உடனடியாக அங்கீகரித்து வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நாங்கள் ஒருபோதும் செயல்பட விடமாட்டோம். தமிழர் வரலாற்றை காக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்" என்று மத்திய அரசுக்கு ஒரு கடுமையான சூளுரையை விடுத்தார்.
திருச்சி சிவாவின் உரைக்குப் பிறகு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசைக் கண்டித்து "கீழடி அறிக்கைகளை உடனே வெளியிடு!", "தமிழர் வரலாற்றை மறைக்காதே!", "மத்திய அரசே, பதில் சொல்!" போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.