/indian-express-tamil/media/media_files/caNFVdUFrwAqYNUBk4TN.jpg)
நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானா கொள்ளைக் கும்பல் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றைய தினம் ஏ.டி.எம். இயந்திரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. மேலும் அந்த லாரி சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சினிமா பாணியில் போலீஸ் வாகனங்களைக் கொண்டு லாரியை போலீசார் துரத்திச் சென்றுள்ளனர்.
நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் வேன், கார், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என சுமார் 30 வாகனங்களில் சென்று அந்த கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று நாமக்கல் சேலம் மாவட்ட எல்லையில் சுற்றி வளைத்தனர். அப்போது லாரியில் இருந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, லாரியில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் போலீஸாரை நோக்கி சுட்டுள்ளனர். பாதுகாப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர். பின்னர் அவர்களை பிடித்த போலீசார், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும், ஏ.டி.எம் இயந்திரம், சொகுசு கார், கட்டுக்கட்டாக பணம் ஆகியவற்றுடன் ராஜஸ்தான் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது தமிழக போலீஸாரால் நாமக்கல் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரட்டிப் பிடித்துள்ளனர். அந்த கண்டெய்னர் லாரியில் சுமார் ரூ.65 லட்சம் ரொக்கம், ஒரு சொகுசு கார் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானா கொள்ளைக் கும்பல் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.