கொரோனா பரவலைத் தடுக்க ஒட்டுமொத்த நாடே ஊரடங்கால் முடங்கிப் போயுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வதந்தி, தமிழகம் - கேரளா மாநிலங்களுக்கு இடையே சகோதரத்துவம் மலர இரு மாநில முதல்வர்கள் நட்புறவைத் தெரிவிக்க வழிவகுத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது கட்டத்தை அடைந்துள்ளது. அதற்கு முன்னதாகவே மத்திய அரசு, மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து அண்டை மாநிலங்களான தமிழகமும் கேரளாவும் முன்மாதிரியான நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் கேரளாவின் முல்லைப் பெரியாறு தண்ணீரை சார்ந்தும் கேரளா தமிழகத்தின் காய்கறிகள் உணவுப் பொருட்களை சார்ந்தும் இருக்கின்றன. அவ்வப்போது, இரு மாநிலங்களுக்கு இடையே புகைச்சல்கள் எழுவதும் உண்டுதான்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனே தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்த பிற மாநிலத்தவரும், கேரளாவில் இருந்த பிற மாநிலத்தவரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில், அங்கேயே இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று முன் தினம் கேரளா கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்துடனான அனைத்து சாலைகளையும் மூட முடிவு செய்துள்ளது என்று வதந்தி பரவி வருகிறது. இதனால், கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பும் விவசாயிகள், வியாபாரிகள் இடையே கவலை நிலவியது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கேரளா தனது எல்லைகளை மூட உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்பதை தெரிவித்த கேரள முதல்வர் பினராயின் விஜயன், இதுபோன்ற ஒரு விஷத்தை நாங்கள் நினைத்ததில்லை. தமிழர்கள் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமில்லை அவர்களை நாங்கள் சகோதர்களாகவே பார்க்கிறோம் என்று கூறினார்.
கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi pic.twitter.com/W0eMAVbMPm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 4, 2020
பினராயி விஜயன் பேசியதை தமிழக முதல்வர் பழனிசாமி, அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். மேலும், முதல்வர் பழனிசாமி, கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலில் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கிப் போயுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் ஒரு வதந்தி செய்தியை பொய்யெனக் கூறி இரு மாநிலங்கள் இடையே சகோதரத்துவம் நட்பும் மலர வழிவகுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.