கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு என்ற பகுதியில் செடிகடை நடத்தி வந்தவர் வினிதா மோல் (38). இவர் கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியும் கொள்ளையடிப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பேரூர்கடா போலீசார் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். மேலும், வினிதா கொலை செய்யப்பட்ட பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர்கள், பொதுமக்களிடம் விசாரணை செய்தனர்.
கைது
இந்நிலையில், அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ராஜேந்திரனை பிடித்து விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று வினிதாவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாகவும், வினிதா கத்தி கூச்சலிடவே அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார்.
மேலும், வினிதாவிடம் இருந்து பறித்த நான்கு பவுன் தங்க செயினை கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள அடகு கடையில் 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்தார். உடனே கேரளா போலீசார் ராஜேந்திரனை கன்னியாகுமரிக்கு அழைத்துவந்து அந்த நகையை மீட்டு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
அதிர்ச்சி தகவல்
வினிதாவை கொலை செய்வதற்கு முன்பு ராஜேந்திரன் ஏற்கனவே 4 கொலைகளை செய்துள்ளார். தமிழக போலீசாரின் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் ராஜேந்திரன் சரித்திர ரவுடியாக இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறொரு வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ராஜேந்திரன் அம்பலமுக்கு பகுதியில் உள்ள டீ கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அப்போதுதான் அந்த பகுதியில் செடிகளை விற்பனை செய்து வந்த வினிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்து அவரை கொலை செய்து தப்பியுள்ளளார். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் நாட்டம் கொண்ட ராஜேந்திரன் தான் திருடும் நகைகளை ஆன்லைனில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
ஏற்கனவே, ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவியை ராஜேந்திரன் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதேபோல், கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் வேறு இரு கொலை வழக்குகளில் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். ஒவ்வொரு கொலையையும் கொள்ளை முயற்சியின்போதே ராஜேந்திரன் நிகழ்த்தியுள்ளார். இவர் எங்கு கொள்ளையடிக்க சென்றாலும் கையில் கத்தியுடன் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ராஜேந்திரன் மீது கன்னியாகுமரி, அம்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தனை கொடூர கொலைகளை செய்துள்ள ராஜேந்திரன் பொருளாதாரத்தில் முதுகலை பட்டதாரி என்பதுதான் ஆச்சரியம். ஆனால், மேலும் படிக்கவேண்டும் என்பதற்காக தொலைதூர கல்வி மூலம் எம்.பி.ஏ படித்து வந்துள்ளார். வினிதாவை கொலை செய்துவிட்டு பறித்த தங்க செயினையும் படிப்பிற்காகவும், ஆன்லைன் வர்த்தகத்திற்காகவும் ராஜேந்திரன் பயன்படுத்தியுள்ளார்.
இருப்பினும், முதுகலை பட்டதாரியான ராஜேந்திரன் எதற்காக டீ-கடையில் வேலை செய்தார் என்பது தெரியாமல் கேரளா போலீசார் திணறினர். மேலும், சம்பவம் நடந்த அன்று கேரளாவில் ஞாயிறு முழு ஊரடங்கு அமலாகி இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது என்பதை பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரன் வினிதாவின் கடைக்குள் கஸ்டமரை போல சென்றுள்ளார்.
அப்போது, வினிதா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாகவும், தங்க செயினை பறித்தபோது கூச்சலிடவே வினிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். ராஜேந்திரன் வழக்கில் திணறிய போலீசார், நகைக்காக அவர் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சம்மன்
இந்த நிலையில், வினிதா கொலை வழக்கில் தமிழக போலீசாருக்கு கேரளா நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், தமிழக காவல்துறைத் தலைவருக்கும் (எஸ்.பி.சி), கேரள காவல்துறைத் தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு எஸ்.பி.சி-க்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் எம். பிறை சந்திரன் மற்றும் என். பார்வதி ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், ஆரல்வாய்மொழி காவல் நிலைய துணை ஆய்வாளர்கள் பி.நீதிராஜ் மற்றும் என்.சிவ குமார் மற்றும் தடயவியல் நிபுணர் ஆர்.ராஜா முருகன் தடயவியல் துறை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பட்டது.
ஏற்கனவே சம்மன் அனுப்பியும் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாததால், மீண்டும் ஆஜராகக் கோரி திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட மற்றும் 7-வது அமர்வு நீதிபதி பிரசூன் மோகன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீல் எம். சலாஹுதீன் தலைமையிலான அரசு தரப்பு, வழக்கை நிரூபிக்க, அதிகாரிகள் சாட்சிகளாக விசாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவர்களது சாட்சியம் இல்லாதது நியாயமான விசாரணையை மறுக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
காரணம்
ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவியை ராஜேந்திரன் கொடூரமாக கொலை செய்த வழக்கை ஆரல்வாய்மொழி காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அதே நேரத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் அந்த வழக்கில் பிரேத பரிசோதனை செய்து இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.