Kerala Gajamela 2022 : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாத்திகவாதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவர் அரசியல் வாழ்வில் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற அவரின் தொண்டர்கள், நலம் விரும்பிகள் பல்வேறு வகையான பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் சமீபத்தில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கும் கஜமேளா. கஜமேளாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து நலன்களையும் பெற வேண்டி யானைகள் அணிவகுப்பு நடத்த பக்தர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆனயாடி கிராமத்தில் உள்ள பழயிடோம் நரசிம்ம சுவாமி கோவிலில் நரசிம்மருக்கு திருவிழா எடுத்து நடத்தப்படும். இந்த திருவிழாவின் ஒரு பாகமாக 80 யானைகளை கொண்டு நடத்தப்படும் கஜமேளா படு விமர்சையாக இருக்கும்.
தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கடவுளுக்கு பலரும் காணிக்கை செலுத்துவது போல் தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற இந்த கோவிலில் யானைகள் அணிவகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு எப்போது கஜமேளா நடத்தப்படுகிறது, யார் யார் நடத்துகிறார்கள் என்பது போன்ற தகவல்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் 6வது யானைகள் அணிவகுப்பு முதல்வரின் வெற்றிக்காக நடத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி இந்த கஜமேளா கொண்டாடப்பட உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினுக்காக யானைகள் அணி வகுப்பு நடத்த வேண்டும், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு யாரோ அழைப்பு விடுத்துள்ளனர். ஏதோ விளையாட்டு தனமாக கேட்கின்றார்கள் என்று கோவில் நிர்வாகம் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் கோவிலுக்கு நேரில் வந்த 2 பேர் ரூ. 9000-ஐ கட்டணமாக செலுத்தி 31ம் தேதி நடைபெறும் அணி வகுப்பில் 6வது அணிவகுப்பு மு.க.ஸ்டாலினின் அரசியல் வெற்றிக்காக நடத்தப்பட வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு 459 அணி வகுப்பிற்கு பக்தர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஸ்டாலின் வளமும் செழிப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக ஆறாவது அணிவகுப்பை தேர்வு செய்து பதிவு செய்துள்ளனர் அந்த நபர்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்த்து பலரும் கோவில் நிர்வாகத்திற்கு அழைப்புவிடுத்து இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சென்னையை சேர்ந்த டையர் கடையில் வேலை பார்க்கும் எம். ஜெயன் என்பவரும், திருநெல்வேலியில் இருக்கும் அவருடைய சகோதரி ரதி பசுபதியும் மு.க.ஸ்டாலினுக்காக இந்த அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டே இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டும் என்று இருவரும் விரும்பியதாகவும், ஆனால் கொரோனா தொற்று காரணமாக இவ்விழா நடைபெறவில்லை என்பதால் இந்த ஆண்டு இந்த அணிவகுப்பிற்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil