கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பகுதி அருகே உள்ள மலைப்பகுதிகளில்
இன்று செவ்வாய்க்கிழமை காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 80க்கும் மேற்பட்வர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காணவில்லை. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்களுடன் ஒரு இணை இயக்குநர், 20 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், ஒரு காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையில் இருந்து 20 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் தனது X பக்கத்தில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் தனது X பக்கத்தில், "கேரளாவிலுள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பற்றிதான் என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. அவர்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.