/indian-express-tamil/media/media_files/2025/10/29/p-r-pandian-mullaperiyar-dam-2025-10-29-17-31-52.jpeg)
'முல்லைப் பெரியாறு வழக்கில் முறையீடு செய்க'... தமிழக அரசுக்கு பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்
கட்டிக்குளம், சிவகங்கை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தென் மண்டலத் தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மண்டலத் தலைவர் பரமக்குடி மதுரை வீரன், மாநில கௌரவ தலைவர் ராமன், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் திருபுவனம் ஆதிமூலம், மாநில இளைஞர் அணித் தலைவர் மேலூர் அருண், மதுரை மாவட்டத் தலைவர் உசிலை மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கியக் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு:
முல்லைப் பெரியாறு வழக்கு: கேரள அரசின் மீது குற்றச்சாட்டு
முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அணைகள் பாதுகாப்பு மசோதா அடிப்படையிலும், ஜல்சக்தி துறைத் தலைவர் தலைமையிலான குழுவும் அணை வலுவாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. ஆனால், கேரள அரசின் தூண்டுதலின் பேரில் பொதுநல அமைப்பின் பெயரில், அணை வலுவிழந்துவிட்டதாகக் கூறிப் புதிய அணை கட்ட அனுமதி கோரி அவசர வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் தொடரப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நீதிமன்றம் 3வது ஆய்வுக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தமிழக நலனுக்கு எதிராக நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தக் கேரளா அரசு முனைவதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும்; தலைமை நீதிபதியிடம் அவசர முறையீடு செய்து கேரள அரசின் தவறான நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும்.
தி.மு.க. அரசின் மீது முக்கியக் குற்றச்சாட்டுகள்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: ராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசுக்குத் தெரியாமல் சுற்றுசூழல் துறை அனுமதி அளித்தது அதிர்ச்சி. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த நிலையில், முதலமைச்சர் தலையிட்டு அனுமதியை ரத்து செய்ய உடனடியாக அறிவிக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக்கழகம்: 2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மதுரையில் உடனடியாக வேளாண் பல்கலைக்கழகம் துவங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்: தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இத்திட்டம் நிதி ஒதுக்கீடின்றி கிடப்பில் உள்ளது. உடனடியாக நிதி ஒதுக்கிப் பணிகளைத் துவக்கிட வேண்டும்.
அரசு கொள்முதல் - 1975 முதல் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழக அரசே கொள்முதல் செய்யும் கொள்கையை அமல்படுத்தினார் கலைஞர். அவரது வழியைப் பின்பற்றுவதாகக் கூறும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுரையில் 10 இடங்களில் தனியாருக்குக் கொள்முதலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனடியாகத் தமிழக அரசே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்தச் சட்டம், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் முகவரியை அழித்துவிட்டது. இது விளைநிலங்கள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை வகைபாடு மாற்றி கார்ப்ரேட்டுகள் அபகரிக்க அனுமதி வழங்குகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளைக் கட்டுமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. எனவே, இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டும், வனத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை இலகுவாக வழங்காததால் உடனக்கு உடன் சுட்டுக் கொல்ல முடியவில்லை. இதனால் பயிர்கள் அழிவதும், மனிதர்கள் சாவதும் தொடர்கிறது. வழிகாட்டு நெறிமுறைகளை இலகுவாக்கி அனுமதி வழங்க வேண்டும்.
வைகை அணையில் 20 அடிக்கு மண் மேடிட்டு நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. வெள்ள காலங்களில் மணல் அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் மூலம் மணலை வெளியேற்றி அணை ஆழப்படுத்தப்பட வேண்டும். மேலும், வருசநாடு பகுதியில் புதிய அணை கட்டி உபரி நீரைத் தேக்கி தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவர வேண்டும்.
தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆறுகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்துச் சுத்தப்படுத்திட வேண்டும். மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்ட அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் நாசகாரத் திட்டம், பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின் மூடப்பட்டிருந்த முத்தனேந்தல் ரயில்வே நிலையத்தை மீண்டும் பொதுமக்களின் நலன் கருதிச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் விவசாயிகள் விரோதக் கொள்கைகளை எடுத்துரைக்கவும், தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கவும், டிசம்பர் மாதம் தமிழகம் தழுவிய பிரச்சார பயணத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us