கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சிறுவாணி அணையில் நிர்ணயிக்கப்பட்ட 45 அடி நீர்மட்டம் வருவதற்கு முன்னரே 42.02 அடியில் உள்ள நிலையில் 1000 கன அடி தண்ணீரை வெளியேற்றி உள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசு இடையே நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி, சிறுவாணி அணையில் ஆண்டுதோறும் (ஜூலை 1 முதல் 30 வரை) 1.30 ஆயிரம் மில்லியன் கனஅடி (டிஎம்சி) நீரை கோயம்புத்தூர் நகராட்சிக்கு 99 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக வழங்க வேண்டும்.
ஆனால் கேரள நீர்ப்பாசனத் துறை, சிறுவாணி அணையில், மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள படி அணையின் கொள்ளளவை 50 அடியாக பராமரிக்க விடுவது இல்லை. முழு நீர்த்தேக்க மட்டமான 49.53 அடிக்கு பதிலாக, அதிகபட்சமாக 45 அடி நீர்மட்டத்தை பராமரித்து வருகிறது.
இதுவும் முல்லை பெரியாறு அணை போல் தான். சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 5 அடி குறைப்பதால் 122.05 மில்லியன் கன அடி (mcft) தண்ணீர் பற்றாக்குறை கோவைக்கு ஆண்டுதோறும் ஏற்படுகிறது.
இது மொத்தமாக அணையில் சேமிக்கப்படும் நீரில் 19% ஆகும். இதன் காரணமாக கோடை காலங்களில் கோவை மாநகரின் தேவைக்கு போதுமானதாக சிறுவாணி அணை இல்லை.
இந்நிலையில் சிறுவாணி அணையின் வால்வுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ள பாலக்காட்டில் உள்ள கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்துக்கு வரும் நீர்வரத்தை பாதியாகக் குறைத்தனர்.
இது கோவை மாநகராட்சி அதிகாரிகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் மீண்டும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த நிலையில் தற்பொழுது 42.02 அடியாக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் அவசரகால வழியில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.. சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட நீர்மட்ட அளவான 45 அடி விரைவில் நிரம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து கேரளா அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“