கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை காலை அம்மாநில அதிரடிப்படை போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இளைஞர் ஒருவர் பலியானார்.
கேரளா மாநிலம், கல்பட்டாவில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள பானசுராவின் பதின்ஜாரதாரா வனப்பகுதிகளில் இன்று காலை இந்த என்கவுண்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிற பானசுராவுக்கு அருகிலுள்ள மீன்முட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கே சென்ற அதிரடிப்படயினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாகி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கேரளாவில் அதிரடிப்படையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் வட்டாரம் கூறுகையில், அதிரடிப்படையினர் ரோந்து சென்றபோது அங்கே 5 மாவோயிஸ்ட்கள் இருந்தனர். அங்கே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் பலியானார். மற்றவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த இடத்தில் இருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தார்கள். முதலில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அதிரடிப்படையினர் பதிலடி கொடுத்தனர் என்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"