/tamil-ie/media/media_files/uploads/2021/09/E_osNgRVkAET81V.jpg)
Vizhinjam International port : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக் கடல் ஓரத்தில் கட்டப்பட்டு வருகிறது விழிஞம் பன்னாட்டு துறைமுகம். இந்தியாவின் ஆழமான பகுதியில் (22 மீட்டர்கள்) அமைய இருக்கும் துறைமுகம் இதுவாகும். விழிஞம் துறைமுகத்திற்கு தேவையான பாறைகளை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பெறுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. பாறைகளை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியாளர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இது தொடர்பாக கேரளத்தின் துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். ஆனால் இது தொடர்பாக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசின் செயலகத்தில் சந்தித்து பேசினார் அமகது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, விழிஞம் துறைமுக கட்டுமானத்திற்கு தேவையான பாறைகளை அனுப்ப தமிழக அரசு உதவ வேண்டும் என்று கேரள அமைச்சர் தமிழக அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். இரு மாநில அமைச்சர்களின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, இந்த விவகாரத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றூம், விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
“நேர்மறையான பதில் தமிழக அமைச்சரிடம் இருந்து கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவையான ஆதரவை கேரள அரசு தமிழக அரசுக்கு வழங்கும்” என்று அகமது செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.