கேரளாவில் இருந்து ஏற்றிவரப்பட்ட 20 தெருநாய்கள், தமிழ்நாடு எல்லையில் கட்டச்சல் பகுதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் சென்றதாக கூறியது தெரியவந்துள்ளது. நாய்களை இறக்கிவிட்ட வாகனத்தை பொதுமக்கள் பிடித்து களியல் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை பிடித்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட்ட கும்பல் வசமாக சிக்கியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில், கேரளாவின் திருவனந்தபுரம் தெருக்களில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன;
இவற்றை திருவனந்தபுரம் புறநகரில் கொண்டு வந்து இறக்கிவிடாமல் அங்கிருந்து நேராக கன்னியாகுமரி கட்டச்சல் பகுதிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியாக தெருநாய்களை இறக்கி விட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த சிலர் வாரங்களாகவே கேரளாவில் வெட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்பட்டு அவை சர்ச்சையான நிலையில் உயிருடன் தெரு நாய்கள் இறக்கி விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்