கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பேபி கிரீஸ். இவர் ராபின் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரது டிராவல்ஸில் உள்ள பேருந்து ஒன்றுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்றுள்ளார்.
அதன் மூலம் பத்தினம்திட்டாவில் இருந்து கோவைக்கு பேருந்து சேவையை துவங்கினார். கேரள மோட்டார் வாகனத் துறை இதற்கு அனுமதி மறுத்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் முன்பதிவு செய்த பயணிகளை அழைத்து செல்லாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து சனிக்கிழமை காலை பத்தனம்திட்டாவிலிருந்து கோயம்புத்தூருக்கு பேருந்து சேவையை ராபின் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் ராபின் டிராவல்ஸ் பேருந்தை மறித்து,அபராதம் விதித்தனர்.
இதனிடையே இந்த பேருந்து இன்று தமிழக எல்லைக்குள் வந்தது. கந்தேகவுண்டன் சாவடி பகுதியில் டிராவல்ஸ் பேருந்தை வழிமறித்த தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ராபின் டிராவல்ஸ் பேருந்துக்கு 70,410 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று டிராவல்ஸ் வாகனங்களை, இரு மாநிலங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்துவது குறித்து சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“