scorecardresearch

கேரள அரசின் அறிவிப்பும் தமிழக மது எதிர்ப்பும்

கண்ணன் 2014ஆம் ஆண்டில் கேரளாவில் அப்போதைய முதல்வர் உம்மன் சண்டி, 10ஆண்டுகளுக்குள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். முதல் கட்டமாக ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் மட்டுமே மது விற்க அனுமதிக்கப்படும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2016 தேர்தலில் வென்று ஆட்சியமைத்திருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இப்போது மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. மூன்று மற்றும் நான்கு நட்சத்திர உணவு விடுதிகளிலும் மதுவும் கள்ளும் விற்பதற்கான உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மது விற்பனை மையங்கள் செயல்படுவதற்கான நேரமும் […]

கேரள அரசின் அறிவிப்பும் தமிழக மது எதிர்ப்பும்
கண்ணன்

2014ஆம் ஆண்டில் கேரளாவில் அப்போதைய முதல்வர் உம்மன் சண்டி, 10ஆண்டுகளுக்குள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். முதல் கட்டமாக ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் மட்டுமே மது விற்க அனுமதிக்கப்படும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது.

2016 தேர்தலில் வென்று ஆட்சியமைத்திருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இப்போது மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. மூன்று மற்றும் நான்கு நட்சத்திர உணவு விடுதிகளிலும் மதுவும் கள்ளும் விற்பதற்கான உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மது விற்பனை மையங்கள் செயல்படுவதற்கான நேரமும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்லது. அதோடு மதுவிலக்கு என்பது உலகம் முழுக்க தோல்வியடைந்த திட்டம் என்றும் மதுப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரமும் மனமாற்றமும் மட்டுமே மதுப்பழக்கத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கும் என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இருந்தாலும் இந்த மதுவிலக்குக் கொள்கையைக் கைவிடும் முடிவு கேரள எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் மதுவிலக்குக் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மதுவின் தீமை மிகத் தீவிரமான மக்கள் பிரச்சனையாக வடிவெடுத்துள்ளது. அரசே மது விற்பனையை நடத்துவதாலும், அரசுக்குப் பிரதான வருவாய் ஆதாரமாக மது விற்பனை இருப்பதாலும் மது விற்பனையால பல்வேறு அவலங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மது விலக்குக்கான போராட்டத்தைப் பல்வேறு அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. சசி பெருமாள் என்பவர் உயிர்நீத்தார். கேரளத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் மதுவிலக்குக் கோரிக்கையை வலுக்கச் செய்தது. பல ஆண்டுகளாக மதுவிலக்குக்காக தீவிரமாக செயல்பட்டுவரும் பாமக தவிர திமுக, மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை அதிமுக அரசை எதிர்த்து மதுவிலக்கு கோரும் போராட்டங்களை நடத்தின அல்லது மக்கள் போராட்டங்களை ஆதரித்தன.

இவற்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பதைத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கும் நிர்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டது. அதேபோல் 5 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது மதுவிலக்கு தொடர்பாக மட்டுமல்லாமல் மதுவினால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தக்கூட எந்த நடவடிக்கையும் எடுத்திராமல் இருந்ததோடு, மது விற்பனையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்ட அதிமுக அரசுக்குத் தலைமை தாங்கிய முதல்வர் ஜெயலலிதா 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.

தேர்தலில் வென்று பதவியேற்ற முதல்நாளே 500 மதுக்கடைகளை மூட ஆணையிட்டார். அதோடு மதுக் கடைகள் திறக்கும் நேரத்தை காலை 10லிருந்து நண்பகல் 12ஆக்கி உத்தரவிட்டார். இப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் நெடுஞ்சாலைகளில் இருந்த மேலும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இவற்றோடு, தமிழகத்தின் பல பகுதிகளில் குடும்பப் பெண்கள், பெரும்பாலும் வீட்டில் உள்ள ஆண்களின் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மதுக்கடைகளை நிரந்தரமாக நீக்கவைக்கும் போராட்டத்தை நடத்தி சில இடங்களில் வெற்றியும் பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளத்தில் மதுவிலக்கு பின்வாங்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு சற்று பின்னடைவைத் தரும் என்பது உண்மைதான். அரசியல்வாதிகளும் தங்கள் செயலின்மைக்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் 1970களில் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்கை முதல்முறையாக நீக்கும்போது அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி சொன்ன காரணம் அண்டை மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடக்கும்போது இங்கு மட்டும் மதுவிலக்கை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்பதுதான். அதில் நியாயமேயில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

விவாதங்களுக்கு அப்பால்

அதோடு மதுவிலக்கு மதுவால் விளையும் கேடுகளுக்குத் தீர்வைத் தருவதை விட புதிய கேடுகளுக்கே வழிவகுக்கும் என்று வாதிடுபவர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களில் மதுப்பழக்கத்திலிருப்பவர்களை அதிலிருந்து மீட்கும் மனநல ஆலோசகர்களும் மருத்துவர்களும்கூட அடக்கம். அதேநேரம் மதுவிலக்கு கட்டாயத் தேவை என்று வாதிடுபவர்களும் கணிசமாக உள்ளனர். இந்த விவாதம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

மதுவிலக்கு வருகிறதோ இல்லையோ மதுவின் தீமைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கட்டுப்படுத்துவதற்கு அனைத்தையும் செய்வதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். தமிழகத்தை மாறி மாறி ஆண்ட கட்சிகள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் கேரளத்தையோ வேறெந்த மாநிலத்தையுமோ தமிழகத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் தமிழகத்தில் மட்டும்தான் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துகிறது. மதுவிற்பனை அரசுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது. அதோடு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்களே மறைமுகமாக மது விற்பனை நிறுவனங்களை நடத்திவருகின்றனர்.

கேரளத்தில் கள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கள் விற்பனையாளர்களின் கோரிக்கை அரசின் காதுகளுக்கே எட்டவில்லை. கள் மீதான தடைக்கு சொல்லப்பட்ட காரணம், கள் விற்பனையை கட்டுப்படுத்துவதும் அரசுக்கு கண்காணிப்பதும் சாத்தியமில்லாத செயல் என்பதே.
கேரளத்தில் மதுவிலக்கு தளர்த்தலோடு சில புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மது அருந்துவோருக்கான குறைந்தபட்ச வயதை 21இலிருந்து 23ஆக உயர்த்தியுள்ளது கேரள அரசு. தமிழகத்திலோ மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 18. அதுவும் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. பல பள்ளி மாணவர்கள் சீருடையுடனே மது அருந்துவதும், மதுபோதையில் பள்ளிக்கு வருவதும் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்வதும் என பல அவலங்கள் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளக நிகழ்ந்துவருகின்றன.

எனவே மற்ற அனைத்து மாநிலங்களையும் விட மது எதிர்ப்புப் போராட்டத்துக்கான நியாயம் தமிழகத்தில் இருக்கிறது. மதுவின் தீமைகளைக் களைவதற்கான பாதையில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kerela government fails in alcohol prohibition what about tamilnadu state