Khushboo says, P. Chidambaram legally meets: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அறிவித்தது. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ விசாரணை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். அங்கே ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றனர்.
ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “ப.சிதம்பரம் என்ன தவறு செய்தார்? பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகிறது; இதனை அவர் சட்டரீதியாக சந்திப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிர்கள் சென்றது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளரும் எம்.பி-யுமான டி.கே.எஸ். இளங்கோவன், “பாஜக அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக விடப்படும் அச்சுறுத்தலை ப.சிதம்பரம் சமாளிபார்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் “மற்ற கட்சிகள் எல்லாம் மக்களிடம் நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்க்கிறார்கள் என்றால்,பாஜகவினர் மட்டும் தான் அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர் என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.