சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்தார். மேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மோடி இன்று சென்னை வந்ததால், அவருக்கு எதிராக பெரும்பாலான கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. இதை தவிர்க்க, ஹெலிகாப்டர் மூலமாகவே அவர் பயணம் மேற்கொண்டார். மேலும், 'GoBackModi' எனும் ஹேஷ்டேக், உலகளவிளான டிரென்டிங்கில் முதலிடம் வகித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தனது ட்விட்டரில், "மன்னிக்கவும் பிரதமரே. எங்கள் வலியை நீங்கள் மதிக்கவில்லை. நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் நாட்டில் குழப்பங்களை மட்டும் உருவாக்கி வருகிறீர்கள். இப்போது அதை மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள். இங்கு நீங்கள் வந்திருப்பதும் எங்கள் மக்களிடையே குழப்பத்தையும், மிகப்பெரிய பிரச்சனையையும் உண்டாக்கத் தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "நாட்டு மக்களுக்காக சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர். மக்களுக்கு தொல்லைகள் கொடுக்க அல்ல. அவருக்கு அதிமுகவினர் அளித்த உபசரிப்பை நினைத்து வெட்கப்படுகிறேன். கலைஞரோ, மறைந்த ஜெயலலிதாவோ கூட இதை செய்திருக்க மாட்டார்கள். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்பதை புரிந்து கொள்கிறோம். அதற்காக, இந்தளவிற்கு நடந்து கொண்டது ரொம்ப அதிகம். மோடி, உங்களை இங்கே வரவேற்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.