Advertisment

‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்’ 2013-ம் ஆண்டு நிகழ்வை விவரிக்கும் குஷ்பு

khushbu sundar vs MK Stalin: குஷ்பு சுய லாபத்துக்காக கட்சி மாறியதாக திமுக.வினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு பதில் கொடுக்கவே இந்த நேரடி அட்டாக்.

author-image
WebDesk
New Update
‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்’ 2013-ம் ஆண்டு நிகழ்வை விவரிக்கும் குஷ்பு

முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நடிகை குஷ்பு காட்டமான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார். 2013-ல் தனது வீட்டைக் கல்வீசித் தாக்க உத்தரவிட்டதே ஸ்டாலின்தான் என குஷ்பு குற்றம் சாட்டியிருப்பது அரசியலில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

Advertisment

நடிகை குஷ்பு, திமுக.வை விட்டு விலகி 7 ஆண்டுகள் ஆகிறது. அவர் ஏன் திமுக.வை விட்டு விலகினார்? என்பதற்கான காரணம், அரசியல் நடப்புகளைக் கவனிக்கும் அனைவருக்கும் தெரியும். ‘திமுக ஜனநாயகக் கட்சி. இங்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் தான் வரவேண்டும் என்பதில்லை. கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்’ என 2013 பிப்ரவரியில் ஒரு வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார் குஷ்பு.

publive-image அருமனை பொங்கல் விழாவில் குஷ்பு

அடுத்த சில தினங்களில் திருச்சியில் கலைஞர் கருணாநிதி தலைமையில் திருச்சி சிவா மகள் திருமணம் நடைபெற்றது. அதில் குஷ்புவும் கலந்துகொண்டு, மதியம் திருச்சி ஃபெமினா ஹோட்டலுக்கு வந்தார். அப்போது திமுக கரை வேட்டி கட்டிய சுமார் 50 பேரும், மகளிர் அணியினர் சிலரும் குஷ்புவை நோக்கி செருப்புகளையும், கற்களையும் வீசித் தாக்கினர்.

அதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாத குஷ்பு, அடுத்த சில நிமிடங்களில் வந்த ஒரு போன் காலில் ஆடிப்போனார். எதிர் முனையில் அவரது குழந்தைகள் அனந்திகாவும், அவந்திகாவும் பதற்றமான குரலில், ‘அம்மா வீட்டுல கல் எறியுறாங்க. பயமா இருக்கு’ என கதறினர். ‘அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை’ என குஷ்பு பேட்டி கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியே குஷ்பு மீது இந்தத் தாக்குதல் நடந்தது. பிறகு அவர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார்.

ஆனால் திமுக.வில் இருந்து விலகியது தொடர்பாக அதன் தலைவர்களை குற்றம்சாட்டி குஷ்பு பேசியதே இல்லை. குறிப்பாக கலைஞர் கருணாநிதியை இன்று வரை தலைவர் என்றே அழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்டாலினைப் பற்றியும் விமர்சிப்பதில்லை. பாஜக.வில் இணைந்த பிறகும் உதயநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஸ்டாலினை அவர் டார்கெட் செய்யாமல் இருந்தார்.

ஆனால் திமுக தரப்பு, காங்கிரஸிலும் குஷ்புவை கண்டு கொள்ளாமல் வைத்திருந்தது. குறிப்பாக ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டணி நிகழ்ச்சிகள், திமுக வேட்பாளர்களுக்கான பிரசாரம் ஆகியவற்றில் கூட்டணி பிரபலம் என்ற அளவில் குஷ்புவுக்கு இடம் இருக்காது. கடைசியாக சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமாருக்கான இரங்கல் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றபோதும் குஷ்புவுக்கு அழைப்பு இல்லை. குஷ்பு காங்கிரஸை விட்டு விலக இந்த நிகழ்வும் ஒரு காரணம்!

இந்த நிலையில்தான் 2013-ம் ஆண்டு தன் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக ஸ்டாலினை நேரடியாக குற்றம் சாட்டி முதல் முறையாக பேசியிருக்கிறார் குஷ்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை வட்டார இந்து சமுதாயம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் குஷ்பு கலந்து கொண்டார். பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இதில் குஷ்பு பேசியதாவது: ‘தேசியக் கல்வி கொள்கை வரும்போது எதிர்க்கட்சியில இருக்கிறவங்க இந்தி திணிப்புன்னு சொல்றாங்க. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பிரதமர் ஒரு மொழியையா உங்கள்மேல் திணிக்க போகிறார்? எதிர்கட்சியை பார்த்து நான் கேட்கிறேன், இந்தி கத்துக்ககூடாதுன்னு நீங்க சொல்லுறீங்க. உங்க வீட்டுல உள்ள பசங்க தமிழ் மொழிதான் கத்துக்கிறாங்களா. கவர்மெண்ட் பள்ளிக்கூடத்திலதான் சேர்த்திருக்கீங்களா. உங்க பசங்க இண்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்குதுன்னு பொருமையா சொல்லிக்கிறீங்க. புதிய கல்விகொள்கையில தாய்மொழி தாண்டி வேற மொழி படிக்க ஆப்ஷன் கொடுக்கிறோம்.

காங்கிரஸிலும் குடும்ப அரசியல் நடந்துகிட்டிருக்கு. ஏன் வேற யாருமே இல்லியா உங்களுக்கு. இவங்க வேலையும் செய்யமாட்டாங்க, மத்தவங்களையும் வேலை செய்ய விடமாட்டாங்க. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவதான். ஆனா பொட்டு வைக்கிறதுல நான் ரொம்ப பெருமைபடுறேன். என் பேருக்கு பின்னால கணவர் பெயர் போடுறதுல எனக்கு பெருமை. ‘சுந்தர்’ன்னா அழகுன்னு அர்த்தம்.

தீபாவளி, பொங்கல் எல்லாம் குடும்பத்தோட கொண்டாடுவோம். மதம் பெருசு கிடையாது, ஆனா ஒரு மதத்துக்கு எதிரா நீங்க செய்யுறதுதான் தவறு. திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிரா பேசுறார். நான் இந்த மேடையில் திருமாவளவனுக்கு ஒரு சவால் விடுறேன். இந்து மதத்துக்கு எதிரா இவ்வளவு பேசுறீங்களே... உங்களுக்கு தைரியம் இருந்தால் இஸ்லாமிய மதத்துக்கு எதிரா ஒரு குரல் கொடுத்து பாருங்க. இந்து மதத்த சார்ந்தவங்க இழிச்சவாயங்கன்னு நினைச்சுகிட்டிருக்கீங்களா?

பா.ஜ.க சிறுபான்மை மதத்திற்கு எதிரானது அல்ல. 2019-ல் பா.ஜ.க வெற்றிபெற இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் ஓட்டுபோட்டார்கள். நாங்க நம்ம ஊர் பொங்கல் விழா கொண்டாடுறதை பார்த்துவிட்டு ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடுறதா சொல்லுறார். அவர் சொந்தமா யோசிக்கமாட்டார், துண்டு சீட்டை வைத்துக்கொண்டு பேசுவார்.

தென் இந்தியாவில் பா.ஜ.க வரமுடியாதுன்னு சொன்னாங்க. தெலங்கானாவில் அவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது. காஷ்மீரிலும், கன்னியாகுமரியிலும் ஜெயிச்சுட்டோம். ஒருகாலத்தில் 2 எம்.பி இருந்தாங்க. இன்னிக்கு 300 எம்.பி. இருக்காங்க. முதலில் ஏழு, எட்டு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தோம். இன்னைக்கு 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அப்ப தமிழ்நாட்டுல ஜெயிக்க முடியாதா?

நீங்க வாக்களிக்கும்போது தாமரையில் இருக்கும் பட்டனை அழுத்துங்க. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா தாமரைன்னா பூ, அதுபோல குஷ்பு, இரண்டு பூவையும் கனெக்ட் பண்ணிக்குங்க.

தி.மு.க ஆட்சியில பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததுன்னு சொல்லிக்கிறாங்க. மு.க ஸ்டாலினுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதே தி.மு.க-வில நான் இருக்கும்போது திருச்சியில ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். எட்டு வயது, பத்து வயது ரெண்டு பெண் குழந்தைகளை தனியா விட்டுட்டு போனேன். என் கணவர் ஹைதராபாத்தில இருந்தார். காலையில திருச்சிபோயிட்டு மாலையில சென்னை போயிடுவேன்னு நம்பி போனேன். நான் திருச்சியில இருக்கும்போது என் விட்டுல கல்லெறிஞ்சாங்க. ‘அம்மா பயமா இருக்கு’ன்னு பசங்க போன் பண்ணி கதறினாங்க. ஒரு தாய்ங்கிற முறையில பதறிப்போய் ஸ்டாலின பார்க்கப்போனேன். ‘ஐயா சாப்பிட்டுட்டு இருக்காங்க. இப்ப பார்க்க முடியாது’ன்னு சொன்னாங்க.

‘உங்க கட்சித் தொண்டர் வீட்டுல கல் வீசுறாங்க, வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க, எனக்கு பயமா இருக்கு’ன்னு கதறி அழுதிட்டு இருக்கேன் நான். ஸ்டாலின் பார்க்கவே இல்ல. அப்பத்தான் வீட்டுல கல் வீசச் சொன்னதே ஸ்டாலின்தான்னு எனக்கு தெரிஞ்சது.

இவங்க எல்லாம் நான் கட்சி மாறிட்டதா சொல்றாங்க. எங்க நமக்கு போட்டியா வந்திருவாளோ, பேச்சுத் திறமை இருக்கு, அழகா இருக்கா, மக்கள் கூட்டத்தை கூட்டுற தைரியம் இருக்குன்னு பயந்தாங்க. அப்படிப்பட்ட நிலையில அங்க இருந்து தள்ளப்பட்டவ நானு. இன்னைக்கு நான் பா.ஜ.க-வுல வந்ததால பாதுகாப்பா இருக்கிறேன். ஒரு பெண்ணுங்கிற முறையில், பெண் குழந்தையின் தாய் என்ற முறையில், நாட்டில் உள்ள பெண்களுக்கு பா.ஜ.க பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்க வந்திருக்கேன். வரும் தேர்தலில் பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பார்க்கப்போகிறோம்" என்றார் குஷ்பு.

சமீப காலங்களில் குஷ்புவை சுய லாபத்துக்காக கட்சி மாறியதாக சமூக வலைதளங்களில் திமுக.வினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாகவே குஷ்பு இந்த நேரடி அட்டாக்கை ஆரம்பித்து இருப்பதாக தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Mk Stalin Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment