தான் எட்டு வயதாக இருந்தபோது தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், ஆனால் அந்த வயதில் அவருக்கு எதிராக அப்போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் சமீபத்தில் தான் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 12 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, கடந்தாண்டு பா.ஜ.கவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
குஷ்பு கூறுகையில், “குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்று நான் உணர்கிறேன். சமூகம் அவர்களிடம் என்ன கேட்கப் போகிறது என்பதுதான் அவர்களின் முக்கிய பயம். ஆண்களைத் தூண்டிவிட அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள். இதுபோன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும்பாலானவை குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களால் தான் நடக்கிறது. எனவே குழந்தைகள் வெளிப்படையாக பேச வேண்டும்” கூறினார்.
தற்போது கூறியது எதுவும் முன்கூட்டியயே திட்டமிட்டு கூறியது அல்ல என்றார். ஆனால் “விளைவுகளுக்கு பயந்து” குழந்தைப் பருவத்தில் நடந்ததை தற்போது கூறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
“சிறுவயதில் இதை நான் எதிர்கொண்டபோது எனக்கு பொறுப்புகள் இருந்தன. என் சகோதரர்கள், அம்மாவைப் பற்றி கவலைப்பட வேண்டியிருந்தது. இது பற்றி வேறு யாரிடமாவது சொன்னால் அதன் விளைவுகள் பற்றி கூறி என் தந்தை என்னை அச்சுறுத்துவார்.
எனது தாய் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அவர் என்னை அடிக்கடி மிரட்டினார். சிறார் வன்கொடுமைகள் இப்படித் தான் நடக்கிறது. பின்விளைவுகளுக்கு பயந்து குழந்தைகள் இதை வெளியில் சொல்வதில்லை. அமைதியாக இருந்தால் இதுபோன்று அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் அப்போது இருந்திருந்தால், நான் என் தந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருப்பேன்” என்று கூறினார்.
தொடர்ந்து “நான் இதை பொதுவெளியில் பேசிய பின் எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பலரிடமிருந்து அழைப்புகள் வருகிறது. அதிகமான அழைப்புகள் வருகிறது. அவர்கள் அனைவரும் இதை ஒரு நாள் பேசுவார்கள்” என்றார்.
குஷ்பு தற்போது ‘டிமென்ஷியா’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயுடன் வசித்து வருகிறார். “எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தவுடன் என் தந்தை மீண்டும் எங்களுடன் வர முயற்சித்தார். பல மெசேஜ்கள் அனுப்பினார். ஆனால் என் கதவு எப்போதும் மூடப்பட்டு இருக்கும். அவர் கடந்த வருடம் மும்பையில் எங்கே இறந்த விட்டார் என்று நினைக்கிறேன். கடந்த 37 வருடங்களில் நான் அவருடன் பேசியதில்லை. நாம் சொல்வது போல், கர்மா இருக்கிறது. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/