நடிகை என்று கூறி என்னை ட்ரோல் செய்ய முயல்வது என் காதில் விழுகிறது. உங்களை விட எனக்கு வலுவான தோள்கள் உள்ளன என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக வெளியான வீடியோ குறித்து, பெண்களை இழிவாகப் பேசுவதுதான் திராவிட மாடலா? என்னை சீண்டி பார்க்காதீங்க தாங்க மாட்டீர்கள் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஞாயிற்றுகிழமை கண்ணீர் விட்டு ஆவேசமாகப் பேட்டிக் கொடுத்திருந்தார்.
இதையும் படியுங்கள்: குஷ்பு குறித்து அவதூறு; தி.மு.க.வில் இருந்து நீக்கம்: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது
இதனையடுத்து, தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். பின்னர் இதற்காக ஸ்டாலினுக்கு குஷ்பூ ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், இன்று குஷ்பூ தனது கணவர் குறித்து பதிவிட்ட ட்வீட்க்கு, பதில் அளித்த ட்விட்டர் பயனர் உங்கள் கணவரின் பணத்தை பாதுகாப்பதற்காக தானே பா.ஜ.க.,வில் சேர்ந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காட்டமாக பதில் கொடுத்த குஷ்பூ, "நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம் கெட்டவர்கள்." என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்துகொண்டு ட்விட்டரில் ஒருவரது வீட்டு பெண்கள் பற்றி நடிகை குஷ்பு தகாத முறையில் பதிவிட்டு இருப்பதாக பலரும் அவரது செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓ திராவிட முட்டாள்களே! உங்களையும், கட்சியைக் கட்டியெழுப்ப தன் உயிரைக் கொடுத்த மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களையும் கேலி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் நிறைந்தவர் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கட்சியில் இருந்தபோதும் நடிகையாக தான் இருந்தேன். அதனால் நான் நடிகை என்று கூறி என்னை ட்ரோல் செய்ய முயல்வது என் காதில் விழுந்தது. உங்கள் மீது எறியப்படும் பிச்சையால் செழித்து வளரும் உங்களைப் போலல்லாமல், அவர்கள் சுயமாக உருவாக்கியதைப் போல, உங்களை விட எனக்கு மிகவும் வலுவான தோள்கள் உள்ளன. உங்களால் முடிந்தால், உங்கள் பெயரை என்னுடைய பெயருடன் இணைத்தால் மட்டுமே செய்தியாக முடியும் என்பதால், உங்கள் அவலநிலை எனக்குப் புரிகிறது. ஆனால் நமது முதல்வரும், உங்கள் தலைவரும் ஒரு நடிகர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதில் அவர் தோல்வியுற்றவர். என்ன பரிதாபம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil