வசந்தகுமார் படத் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பூவுக்கு தகவல் இல்லை. இதையடுத்து, ‘ஈகோவால் கட்சியை பலவீனப்படுத்தாதீர்கள்’என காட்டமாக ட்வீட் செய்திருக்கிறார் குஷ்பூ.
காங்கிரஸ் மாநில செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். நேற்று (30-ம் தேதி) அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று (31-ம் தேதி) காலை 7 மணிக்கு காங்கிரஸ் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மக்களவை தி.மு.க. உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், சு. திருநாவுக்கரசர், எம்.பி., டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், சா. பீட்டர் அல்போன்ஸ், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, டி.என். முருகானந்தம், ஆ. கோபண்ணா, கே. சிரஞ்ஜீவி, டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ். திரவியம், கே. வீரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனால் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூவுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை. வசந்தகுமார் மறைவுக்கு கடந்த இரு தினங்களாக பல்வேறு பதிவுகளில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகிறார் குஷ்பூ. இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாநில தலைமை தனக்கு தகவல் தெரிவிக்காததை பெரும் ஏமாற்றமாக உணர்ந்திருக்கிறார்.
மேற்படி படத் திறப்பு நிகழ்வு தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்த குஷ்பூ, ‘சிறந்த செயல்பாடு. ஆனால் தமிழக காங்கிரஸின் இதர உறுப்பினர்களுக்கு தகவல்கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் கட்சியின் ஒரே தேசிய செய்தி தொடர்பாளர் நான். செய்தித் தாள்களில் இருந்தே இதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
கட்சியின் பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும். ஈகோவால் பலவீனமாக்கக் கூடாது. இதை எப்போது செய்யப் போகிறோம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் குஷ்பூ. இதில் குஷ்பூ கருத்துக்கு ஆதரவாக பலரும் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"