ஸ்ரீ கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி உள் நோக்கத்துடன் பேசவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவமதித்து பேசியதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. பொள்ளாச்சி சம்பவம், ஈவ் டீசிங் ஆகியவற்றுக்கு கிருஷ்ணன்தான் முன்னோடி என வீரமணி பேசியதாக பல்வேறு அமைப்பினரும் போலீஸில் புகார் செய்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கி.வீரமணி இப்படி பேசியது திமுக கூட்டணியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கருத்து கேட்டது.
மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான். கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல.’ என்றார்.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.