/indian-express-tamil/media/media_files/2025/06/19/tn-health-2025-06-19-09-33-50.jpg)
Kidney disease Dialysis Protein diet Tamil Nadu government Healthcare
டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, தமிழக அரசு ஒரு புரட்சிகரமான திட்டத்தை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, பால், முட்டை, மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஏன் புரதச்சத்து முக்கியம்?
சிறுநீரக பாதிப்பு அல்லது நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்பது, சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போகும் ஒரு தீவிர நிலையாகும். இது உடலில் கழிவுப் பொருட்கள் சேர்வதற்கு வழிவகுக்கிறது. காலப்போக்கில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கக்கூடும், இதனால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். தமிழகத்தில் 8.4% மக்கள் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு முறை தொடங்கி வைக்கப்பட்டது... #Masubramanian#TNHealthminister#DMK4TNpic.twitter.com/VfZwN18lzK
— Subramanian.Ma (@Subramanian_ma) June 18, 2025
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் கே. சாந்தாராம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "டயாலிசிஸ் உடலிலிருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அதே வேளையில், அத்தியாவசிய புரதங்களையும் வெளியேற்றிவிடுகிறது. இதனால் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும், இழப்புகளை ஈடுசெய்யவும் அதிக புரதச்சத்து தேவைப்படுகிறது. உயர்தர புரதம் தசை ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், திசுக்களை சரிசெய்யவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், திரவ சமநிலையை நிர்வகிக்கவும் உதவுகிறது. போதுமான புரதம் இல்லாமல், நோயாளிகள் சோர்வு, தசை இழப்பு மற்றும் சிக்கல்களின் அதிகரித்த ஆபத்தை அனுபவிக்கலாம்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,170 க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் யூனிட்கள் உள்ளன. இவை நாள்பட்ட சிறுநீரக செயலிழந்த நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவைகளை வழங்குகின்றன.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜனவரி 11, 2024 முதல் ஜனவரி 10, 2025 வரை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 200 கோடி ரூபாய்க்கும் மேல் டயாலிசிஸ் சிகிச்சைகளுக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளன. இது டயாலிசிஸ் சிகிச்சையின் அவசியத்தை உணர்த்துகிறது.
கடந்த புதன்கிழமை, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, அரசு மருத்துவமனைகளில் சுமார் 10,000 நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தலா 27 கிராம் புரதம் (400 கிலோகலோரி) கொண்ட உணவாக 100 மில்லி பால், இரண்டு முட்டைகள், கறுப்பு/வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் 20 கிராம் எடையுள்ள மூன்று பிஸ்கட்கள் வழங்கப்படும். இந்த திட்டம் நோயாளிகளின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.