நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தினா்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இரு பெண்களின் சிறுநீரகங்களை பெற்று லட்சக்கணக்கில் விற்றது தொடா்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறையினா் நடத்திய விசாரணையில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் வைத்து சிறுநீரகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியதாக அப்பெண்கள் கூறினராம்.
இதையடுத்து சென்னை உறுப்பு மாற்று ஆணையத்தைச் சோ்ந்த இணை இயக்குநா் தலைமையிலான 3 அதிகாரிகள், திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கோபிநாத் உள்ளிட்டோர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனா்.
அதில் சிலரது பெயா் பட்டியல் விவரங்களையும், அவா்கள் எப்போது மருத்துவமனைக்கு வந்தார்கள், அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் நடவடிக்கை குறித்து தெரியவரும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்