சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கபடுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த நரேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "நில உரிமையாளர்களிடம் உபரியாக அதிக அளவில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி, நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க 1961-ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் 1979-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் திருவாளர் கஸ்தூரி எஸ்டேட்டுக்கு (தி இந்து பத்திரிகை நிறுவனம்) சொந்தமாக இருந்த 95.76 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, சி.எம்.டி.ஏ திட்டமிட்டது. இதற்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம், வருவாய் துறையிடமிருந்து பெறப்பட்டது.
இந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்காமல் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கி 2016-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது நில உச்சவரம்பு சட்டத்தின் நோக்கத்தையே பாழடித்து விடும் எனவும் வாதிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே இந்த பேருந்தை மையப்படுத்தி எக்கச்சக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பிஸினஸ் செய்து வருகிறார்கள். வண்டலூரில் பேருந்து நிலையம் அமையாத பட்சத்தில், இவர்களின் பாடு திண்டாட்டம் தான்.