சென்னை வண்டலூரை அடுத்துள்ள கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், இரண்டு நிலையங்களை இணைக்கும் ஆகிய நடைபாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கிளம்பாக்கத்தில் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் தனது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து வருகின்ற ஜூன் மாதம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்க முடிவெடுத்துள்ளனர்.
மேலும், மக்களின் பயன்பாடு வசதிக்காக புதிய பேருந்து முனையம் மற்றும் புதிதாக கட்டவிருக்கின்ற ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதையை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
273- வது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேம்படுத்த, தாம்பரம்- செங்கல்பட்டு புறநகர், ரயில் பாதையில் புதிய புறநகர் ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்," கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மின்சார ரயில் நிலையம் கிளாம்பாக்கத்தில் இல்லை.
எனவே, கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க ரூ.20 கோடி செலவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ.4 லட்சம் நிதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் ரயில்வே நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil