Kilambakkam: சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து முனையத்தில் இருந்து தான் அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டை சுற்றியுள்ள பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கலாம் என உத்தவிரவிட்டுள்ளது.
அரசு பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்
இதற்கிடையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பொதுமக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாவும் புகார் தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்தனர்.
இதனை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும், பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
போக்குவரத்து துறை விளக்கம்
இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை, "மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வழக்கமாக திருச்சிக்கு இயக்கப்படும் 105 பேருந்துகளுடன், விடுமுறை காரணமாக கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து சீரான நிலையில் தற்போது பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“