செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார்.
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும், வண்டலூா் உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடையவும் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) வெளியிட்ட அறிவிப்பின் படி, SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னிபஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும், எனதெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனைய திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ’கோயம்பேட்டில் இருந்து தென்பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே செல்லும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் நாளையிலிருந்து முழுமையாக இங்கு செயல்படும். மாநகர பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு வரை இயக்கப்படும், கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும்’, என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“