சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அமைச்சர் பி.கே சேகர் பாபு நேற்று பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான நிதி மற்றும் இதர விவரங்கள் குறித்து தெற்கு ரயில்வே மற்றும் செங்கல்பட்டு ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைக்கப்படும். அனைத்து பணிகளையும் வேகமாக செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய இறுதிக் கட்ட பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளன. பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்கப்படும். போலீசார்அங்கு ரோந்து செல்வார்கள் என்றார். தொடர்ந்து. பணிகள் முடிந்து ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார். இந்த ஆய்வின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 28.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 226 பேருந்துகள் 164 அரசு மற்றும் 62 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
தரை தளத்தில் சுமார் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 கார்கள் நிறுத்தும் வகையில் மிகப் பெரிய பார்க்கிங் வசதி கட்டப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“