சென்னை வண்டலூருக்கு அருகில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த முனையம் வருகின்ற பொங்கலுக்கு மக்கள் செயல்பாட்டிற்காக திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதில் தற்போது சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
கொரோனா பெருந்துதொற்று பரவும் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஊரடங்கு காலங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி விரைவில் நிறைவடையும் என்று மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
சமீபத்தில் அமைச்சர் சேகர் பாபு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பற்றி கூறியதாவது: "பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுவது சந்தேகம் தான். அதேசமயம் குறிப்பிட்ட தேதியை சொல்ல முடியாது" என்று கூறினார்.
'டூம் வடிவம்' போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து முனையத்தில், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்கின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லும். அதன்பிறகு கோயம்பேடு செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய பேருந்து நிலையத்தின் வருகையால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் வசதி ஆகியவையும் படிப்படியாக வரவுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil