வண்டலூர் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த பேருந்து நிலையம், ஜி.எஸ்.டி சாலையில் வருவதால், கோயம்பேடு - பெருங்களத்தூர் இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் இல்லாததால், மாநகரப் பேருந்து அல்லது அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆட்டோரிக்ஷாக்களை நம்பியிருக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்கே ரயில் நிலையம் அமைக்கும் செயல்முறை நீண்ட நடைமுறையை உள்ளடக்கியது என்று தெற்கு ரயில்வே கூறுகிறது.
சென்னை வண்டலூர் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நகரும் படிக்கட்டுகள், லிப்ட்கள் மற்றும் பிரதான முனையத்தில் உள் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கோயம்பேடு சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் சுமையைக் குறைக்கவும் கிளம்பாக்கத்தில் புதியதாக செயற்கைக்கோள் பேருந்து நிலையதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் எல்லா பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், சின்ன சின்ன வேலைகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் அதை முடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் கோயம்பேடு - பெருங்களத்தூர் இடையே நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) ஜி.எஸ்.டி சாலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி) பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் ஒரே நேரத்தில் நகருக்குள் நுழைவதால் சென்னையே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை சென்னை நகரத்துக்குள் நுழைய விடாமல் வெளியேயே ஒரு பேருந்து நிலையம் அமைத்து தடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிலைக் குறைக்க முடியும் என்று திட்டமிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
அதே போல, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக சி.எம்.டி.ஏ-வால் மாதவரம் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டப்பட்டது. அந்த வரிசையில்தான், கிளம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா இரண்டு செயற்கைக்கோள் பேருந்து முனையங்களைக் கட்ட சி.எம்.டி.ஏ திட்டமிட்டது.
2019-ல் தொடங்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டம் 2021-க்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். ஆனால், அது கோவிட்-19 தொற்று நோய் பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக தாமதமானது.
2022-ம் ஆண்டில் பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர், வட சென்னையில் இருந்து தொழிலாளர் பற்றாக்குறை மீண்டும் இந்த திட்டத்தை தாமதப்படுத்தியது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் அல்லது இந்த ஆண்டு ஜனவரிக்குள் திறக்க சி.எம்.டி.ஏ திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் இன்னும் நிறைவடையவில்லை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நிலுவையில் உள்ள மழைநீர் வடிகால், சாலை விரிவாக்கம் மற்றும் தங்கும் விடுதியில் சின்ன சின்ன இறுதி கட்டப் பணிகள், பாதாள கார் பார்க்கிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த பணிகள் நிறைவடைந்ததும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா நடக்கும் என்று சி.எம்.டி.ஏ மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
ரூ. 393 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று நம்புகிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கிட்டத்தட்ட 90 ஏக்கர் பரப்பளவில் 6,40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 220-க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான தனி முனையம் ஆகியவை உள்ளன. இந்த முனையம் 2,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டது. ஒரு பெரிய ஏட்ரியம், உணவுத் திடல்கள், பயணிகள் மற்றும் பேருந்து பணியாளர்களுக்கான தனித் தங்குமிடங்கள், கடைகள், பயணிகளுக்கான அறைகள் மற்றும் பொது வசதிகளைக் கொண்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடித்தளத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் ஊரப்பாக்கம் சந்திப்பு வழியாக ஜி.எஸ்.டி சாலையை நோக்கி செல்லும் வகையில், ஐயஞ்சேரி சாலையை விரிவுபடுத்தி, நடைபாதை அமைத்து, உள்ளே வருகிற மற்றும் வெளியே செல்லும் பேருந்துகளை தனித்தனியாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி சாலையில் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்திருந்தாலும், செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் புறநகர் ரயில் பாதை நம்பகமானது. இருப்பினும், ரயில் நிலையம் இல்லாததால் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை நம்பியிருக்கும் பயணிகள் அல்லது ரயில் நிலையங்களில் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோரிக்ஷாக்கள் மூலம் ரயில் நிலையத்தை அடைய சிரமப்படுவார்கள் என்பதால், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து மினி பேருந்து சேவை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.