Janani Nagarajan
Kilambakkam Bus Terminus : பண்டிகை காலத்தில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரவேண்டும் என்று நினைத்தாலே மக்கள் தயங்குவதைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம், இதில் மழைப்பொழிவினால் சாலைதோறும் வெள்ளப்பெருக்காக இருப்பதால் போக்குவரத்து நெரிசலை எண்ணி மக்கள் பயணிப்பதற்கே அஞ்சுகின்றனர்.
வெளியூரிலிருந்து பேருந்தில் வர நினைக்கும் மக்களுக்கும், வெளியூருக்கு செல்ல நினைக்கும் மக்களுக்கும் மிக முக்கியமான பேருந்து நிலையமாக விளங்குவது கோயம்பேட்டில் இருப்பது மட்டும் தான். இதனால் கூட நெரிசல் அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். கொரோனா நோய்த்தொற்று பரவல் இருக்கும் சமயத்தில் இவ்வாறு கூட்டத்தில் செல்வது பாதுகாப்பானதல்ல.
எனினும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.22ஏ) கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை 2022 மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது.
பேருந்து நிலையத்தின் கட்டுமானம் 2019-இல் துவங்கப்பட்டது, அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக பணியாளர்களின் வருகை குறைந்துவிட்டால் கட்டுமானப்பணி இன்னும் முழுமையடையவில்லை. பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணி எழுபது சதவீதம் முடிந்த நிலையில், மூன்று மாதங்களுக்குள் கட்டுமானம் முழுமையடையும் என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து தகவல் வெளியானது.
ரூ.397 கோடியில் கட்டப்படும் டெர்மினஸ், 12க்கும் மேற்பட்ட கழிப்பறைத் தொகுதிகள், இருக்கைகளுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, எஸ்கலேட்டர்கள், 215 நடைபாதைகள், பேருந்து பணியாளர்களுக்கான தங்குமிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் ஒரே நேரத்தில் 250 அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. வளாகத்தில் சுமார் 3,000 தனியார் வாகனங்கள் நிறுத்தப்படலாம்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் 44.74 ஏக்கர் பரப்பளவில், 6.40 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. கட்டுமானத்திற்காக 393.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் பயணிகளுக்கு புதிய பேருந்து முனையம் சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைதூர அரசு பஸ்களை இயக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) அடுத்த ஆண்டு முதல் கோயம்பேடு சி.எம்.பி.டி. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்து புறப்படும். இதனால் நகருக்குள் வசிக்கும் மக்கள் முனையத்தை அடைய அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும். கிளாம்பாக்கத்திலிருந்து அருகிலுள்ள புறநகர் நிலையம் குறைந்தது 2 கி.மீ தொலைவில் உள்ளது. பயணிகள் வண்டி அல்லது ஆட்டோவை தேர்வு செய்தால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த பேருந்து நிலையம் தெற்குநோக்கி செல்லும் பேருந்துகளுக்கும் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இது மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil