வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் சேகர் பாபு இறுதிக் கட்ட பணிகளையும் திறப்பு விழா ஏற்பாடுகளையும் சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வெளிமாவட்ட பேருந்துகளை சென்னை மாநகரத்திற்கு உள்ளே வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிலைக் குறைப்பதற்காகவும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக 2002-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இதையடுத்து, திருவள்ளூர், ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடா உள்ளிட்ட பிற மாநிலப் பேருந்துகளுக்காக மாதவரம் பேருந்து நிலையம் நிறுவப்பட்டது.
ஆனாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும், வாகனப் பெருக்கதாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் சென்னை மாநகருக்குள் வருவதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிமையாக பயணம் மேற்கொள்வதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. தற்போது கிளாம்பாக்கம் புறநகர் 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பூங்கா அமைத்தல் உள்ளிட்ட மீதம் உள்ள 1% இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், சனிக்கிழமை மாலை அமைச்சர் சேகர்பாபு கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பெயர் பொருத்தும் பணிகள், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்குள் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்கள் வசதிக்காக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மிக விரைவில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்காக விழா மேடை அமைக்கும் இடத்தையும் அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"