சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம் என்று பெயரிடப்பட்டு கடந்த ஜனவரி மாத இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது கிளாம்பாக்கம் செல்வதற்கு கோயம்பேட்டில் இருந்து தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம் அமைக்க, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும், என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறைக்காக ரூ. 2,65,200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில வாரியாக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“