புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையிலான பூசல் தொடர் கதையாக நீடித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய உள்துறை பிறப்பித்த உத்தரவு ஒன்றில், ‘அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுனர் அறிக்கையாக கேட்டுப் பெறலாம்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், ‘அரிதிலும் அரிதான விஷயங்களில் மட்டுமே ஆளுனர் அறிக்கை பெற முடியும். அன்றாடம் அறிக்கை கேட்டால், நிர்வாகம் கேலிக்கூத்தாகிவிடும்’ என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். எனவே கிரன் பேடி புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அன்றாடம் அறிக்கை பெற முடியாது.