தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மறைந்த அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதா குறித்து கடும் விமர்சனம் செய்தார்.
அவர் பேசுகையில், "இந்த தமிழ்நாட்டு மண்ணிற்கு ஒரு ராட்சசியை அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு. நன்றாக இருந்த நாட்டை நாசமாக்கினார். அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுகளாக அனுபவித்தோம். ஹைதராபாத் கிளம்பிய ஜெயலலிதாவை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். ஹைதராபாத் செல்லாதீர்கள். நாட்டை காப்பாற்ற நீங்கள் வேண்டும் என்று கூறி தடுத்து நிறுத்தினோம். அதற்கான பாவத்தை 10 ஆண்டுகாலம் தமிழ்நாடு அனுபவித்தது" என்று கூறினார். அவரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தி.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அ.தி.மு.வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/