திருச்சி சிவா இல்லம் சென்று கே.என். நேரு ஆறுதல் கூறினார்.
திருச்சி சிவா எம்.பி.யின் பெயரை பூங்கா திறப்பு கல்வெட்டிலும் போஸ்டரிலும் போடவில்லை என அவரது தரப்பினர் அமைச்சர் கே.என் நேருவுக்கு கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
இதனைக் கண்டித்து அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் தாக்குதல் நடத்தினர்.
திருச்சி திமுகவின் உட்கச்சிப் பூசலால் காவல் நிலையத்தில் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
திருச்சி சிவா வீட்டில் கே.என். நேரு
இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் கே என் நேரு இன்று மாலை திருச்சி எம்பி சிவா இல்லத்திற்கு வந்து ஆறுதல் சொல்லி இருவரும் மீடியாக்கள் முன் தோன்றி பரஸ்பரம் சமாதானம் அடைந்ததாக தெரிவித்தனர். இருவரும் தத்தமது மனதில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
நேரு ஆற்றுகிற பணியினை என்னால் ஆற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றுகிறப் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. ஆனால், இருவரும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம் என திருச்சி சிவா எம்பி தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான காரை பார்வையிட்ட கே.என். நேரு
அதேபோல், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால், நடக்க கூடாதது நடந்து விட்டது. நானும், சிவாவும் மனம் விட்டு பேசினோம். முதலமைச்சரும், திமுக தலைவர் என்னை அழைத்து சிவாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி, சமாதானப்படுத்தி விட்டு வா என்றார். திமுக என்ற ஒரே குடும்பத்தில் இருவரும் பயணிக்கின்றீர், இனி உங்களுக்குள் மனஸ்தாபம் வரக்கூடாது என்றார்.
அப்போது நான் அப்படி செய்வேனா? ஏதோ தகவல் பரிமாற்றத்தில் தவறு நடந்து விட்டது இனி அப்படி நடக்காது என்ற உறுதியை தலைவரிடம் சொல்லிவிட்டு அவர் அறிவுறுத்தலின் படி சிவாவை இன்று நேரில் சந்தித்து, சமாதானப்படுத்தியுள்ளேன்.
திருச்சி சிவா வீட்டில் கே.என். நேரு
நடந்த சம்பவம் குறித்து முதலில் எனக்கு தகவல் தெரியாது. நான் தஞ்சையில் இருந்தேன், சிவாவும் வெளிநாடு சென்று விட்டதால் கம்யூனிகேஷன் கேப் ஏற்பட்டது என அமைச்சர் கே என் நேருவும், திருச்சி சிவாவும் இணைந்து மீடியாக்கள் முன் தோன்றி பேசினர். முதல்வர் அறிவுறுத்தலின்படி, எலியும் பூனையும் ஆக இருந்த இருவரும் ஒருசேர இணைந்த கைகளாக செய்தியாளர்களை சந்தித்தது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/