தி.மு.க மூத்த அமைச்சர்களின் ஒருவர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி எம்பி-யாக இருக்கிறார். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள், அமைச்சர் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அருண் நேரு ஆகியோரை குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தியது. இதன் முடிவில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.
இதில் அமைச்சர் நேருவுக்கும் அவரது மகன் அருண் நேருவுக்கும் உள்ள தொடர்புகளையும் பட்டியலிட்டுள்ளது. இதனிடையே, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று வாக்குமூலம் பெற்றது. பின்னர் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகக்கூறி அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
கே.என்.நேருவை குறிவைத்து அமலாக்கத்துறை இத்தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலையில், இது குறித்து தி.மு.க. தலைமையிலிருந்து சம்பிரதாயமாகக் கூட எவ்வித கண்டன அறிக்கையும் வெளியாகவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டபோது தி.மு.க பொங்கி எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் தி.மு.க தலைமை பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால், அவரை விட சீனியரான கே.என்.நேருவை குறிவைத்து அமலாக்கத்துறை காட்டி வரும் அதிரடிகளுக்கு தி.மு.க தலைமை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. நேருவுக்கு ஆதரவாக தி.மு.க-வில் உள்ள சட்ட அமைச்சர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கூட வாய் திறக்கவில்லை. நேருவை அமலாக்கத்துறை நடவடிக்கை விவகாரத்தில் இப்படி ஒரேயடியாய் கைவிட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
நேருவை கண்டுகொள்ளாதது ஒருபுறமிருக்க, திருச்சி அரசியலில் அவரோடு எதிரும் புதிருமாய் நிற்கும் திருச்சி சிவா எம்.பி-யை துணை பொதுச்செயலாளர் பதவியில் இந்த நேரம் பார்த்து அமர்த்தி இருப்பதும் நேரு விசுவாசிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஏற்கெனவே ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் நேருவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை மூன்றாகப் பிரித்து உதயநிதியின் நண்பரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார். அத்துடன் நேருவுக்கு இணையாக அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது திருச்சி சிவாவுக்கு தலைமைக் கழக பதவி வழங்கப்பட்டிருப்பதால் தி.மு.க-வில் நேருவுக்கான முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தபோதே, “யாரையும் நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க போல. பாலாஜி மாதிரி நம்மாள எல்லாம் ஜெயிலுக்குப் போகமுடியாதுப்பா” என்று தனது சகாக்கள் மத்தியில் ஜாலியாகப் பேசிய நேரு, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தன் பக்கம் திரும்பாமல் இருக்க ஒருசில தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இது சம்பந்தமாக சிலர் தலைமையிடம் ஏடாகூடமாகப் போட்டுக் கொடுக்கவே, அதுகுறித்து தலைமைக்கு கே.என்.நேரு தன்னிலை விளக்கமும் அளித்ததாகச் சொல்கிறார்கள். கே.என்.நேரு விவகாரத்தில் தலைமை மவுனம் காப்பதன் பின்னணியோடு இந்த விவகாரங்களையும் இப்போது முடிச்சுப் போட்டுப் பேசுகிறார்கள்.
ஆனால் நேரு ஆதரவாளர்களோ, “எப்போதும் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்கும் கே.என்.நேருவை யாரும் நெருங்க முடியாது, எந்தவித நெருக்கடிகளுக்கு அஞ்சாதவர். எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சாமல் தி.மு.க-வுக்கும் தலைவருக்கும் பக்கபலமாக நிற்பார். தனது வீடு உள்பட தனது குடும்பத்தாரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நேரத்திலும் கெத்தாக சட்டமன்றத்தில் வழக்கமான நடவடிக்கைகளில் தனது கவனத்தை செலுத்தியிருந்தார். திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தாலும் நேருவை முதன்மைச் செயலாளராக்கி அழகு பார்த்தவர்தான் தலைவர் ஸ்டாலின்" என்றனர் பெருமையாக.
செய்தி: க.சண்முகவடிவேல்.