திருச்சியில் நாளை ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டி; கே.என்.நேரு துவக்கி வைப்பு
ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வரும் நாளை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியினை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஈஷா அவுட் ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது.
நம் நாட்டின் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தலைமுறையாய் செழுமைப்பட்டிருந்த நிலத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் தனித்துவமான ஒரு திருவிழா ஈஷா கிராமோத்சவம். கிராமோத்சவம் என்பதன் உண்மையான அர்த்தம் "கிராமங்களின் கொண்டாட்டம்" என்பதாகும். நாட்டின் 65 சதவிகித மக்கள் தொகை கிராமத்தில் தான் உள்ளது. இம்மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் வளமை இம்மேம்பட்டிற்றிக்காக கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு ஈஷாவின் திட்டங்களின் முக்கிய நோக்கம் இதுதான்.
அவர்களின் உள்ளத்தில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி கிராமப்புற சமூகங்களில் கொண்டாட்டத்தின் தன்மையை கொண்டு வருவதே ஈஷாவின் நோக்கம். கிராம மக்களை விளையாட்டு, யோகா மற்றும் "ஈஷா கிராமோத்சவம்" போன்ற திருவிழாக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கம் வெற்றி பெற்றுள்ளது.
ஈஷாவின் கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் கிராமோத்சவம் தமிழக கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு உற்சாகமான திருவிழா. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது.
இந்த கிராமோத்சவத்தின் இறுதி விளையாட்டுப்போட்டிகள் 2 நாள் மாபெரும் நிகழ்வாக கொண்டாடப்பட்டு நிறைவு பெறும். கிராமோத்சவத்தின் முக்கியமான அம்சம் "ஈஷா புத்துணர்வு கோப்பை"-க்காக நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிகள், தமிழகம் முழுவதுமிருந்து வந்து ஆயிரக்கணக்கான பேர்கள் பங்கேற்கும் ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் எறிபந்து, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி இறுதி போட்டிகளாக நடைபெறும்.
இந்த நிகழ்வில் கிராமிய உணவு திருவிழா, கிராமிய கலாச்சார திருவிழா மற்றும் சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசை குழுவினரின் ஆர்ப்பரிக்கும் இசை என பல நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றி களைகட்டும். இவை தேவையற்ற நகரமயமாக்கலில் நாம் தொலைத்து விட்ட ஒன்று.
தமிழக கிராமிய சாராம்சத்தை பறைசாற்றும் விதமாக கிராமிய விளையாட்டுகள், இயல், இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய உணவு என்று பல விதமாக கொண்டாடப்படும் திருவிழா இது. இங்கு நடத்தப்படும் மாநில அளவிலான, கிராமங்களுக்கு இடையேயான, விளையாட்டு போட்டிகள் கிராமிய வாழ்க்கையில் விளையாட்டின் பங்கை வெளிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
அந்தவகையில், முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் நாளை 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன. இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும்.
கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.