'நம்ம ஊரு சூப்பரு' சுகாதார திட்டத்தில் முத்திரை பதிக்கும் திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று (21.08.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான 'நம்ம ஊரு சூப்பரு" திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளிலும் சிறப்பு சுகாதார முகாமான ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Advertisment
முதற்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை திட, திரவக் கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்துதல், செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 16 வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இனி வரும் நாட்களில் இத்திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், சுற்றுப்புற தூய்மையை உறுதி செய்ய பொதுமக்கள் தாமாக முன்வரவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”