திருச்சி அரியமங்கலத்தில் உடலுறுப்புகள் தானம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு மரியாதை செய்தார். தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி உக்கடை அரியமங்கலம் புங்களாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் பாபு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை (24.09.2023) இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது பாபு மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாபுவின் மூளை செயலிழந்தது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பின்னர் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக அரசாணைப்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ், அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவனந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
அதேபோல், திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியருமான பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், இன்று மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉடலுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“