மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மாநிலம் தழுவிய மருத்துவ அதிகாரிகள், 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: “கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் அவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது என்னுடைய கருத்து.
மருத்துவத்துறை அதிகாரிகளே, நீங்கள் தான் அரசாங்கம். அரசாங்கமே நீங்கள் தான். நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டில் தேர்தெடுக்கப்பட்டு வந்தால் தான். ஆனால், நீங்கள் நிரந்தரமாக பணியில் இருப்பீர்கள். அதனால் நாங்கள் எதுவும் வேகமாக பேசினாலும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், அனுசரித்து கொள்ளுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் இருந்தபோது கடந்த 20 ஆண்டுக்கு முன்னர், 49.99 கோடி திருச்சிக்கு மருத்துவமனை கட்டிடத்திற்கு ஒதுக்கினார்
திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனோ காலகட்டத்தில்கூட பிறந்த அண்ணன் தம்பி எல்லாம் ஒடி விட்டார்கள். ஆனால், உங்கள் உயிரை பற்றிய கவலை கொள்ளாமல் காப்பாற்றினீர்கள். நீங்கள் என்ன குற்றம் செய்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர மேயர் மு அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”